இங்கிலாந்தில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் மாயமான 23 வயது இந்திய மாணவர், லண்டன் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உயர்கல்வி பயில்வதற்காக கடந்த செப்டம்பரில் லண்டன் சென்ற இந்திய மாணவர் மீத்குமார் பட்டேல், கடந்த நவம்பர் 17ம் திகதி திடீரென மாயமானார். இந்த நிலையில் மாயமான மாணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்
இந்நிலையில் கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ப் பகுதியில் தேம்ஸ் நதியில் மாணவரின் சடலம் மிதந்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த மாணவர் மீத்குமார் பட்டேல் பகுதி நேரமாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், மாயமான அன்று நடைப்பயிற்சிக்கு சென்ற மாணவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மாணவர் தன் வீட்டு சாவியை கதவின் அருகில் வைத்துவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவர் ஆற்றல் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இவ்வாறு நடந்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவர் மரணத்தில் சந்தேகம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை எனவும், மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் மீத்குமார் பட்டேல் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக இணையதள வழியில் பொதுமக்களிடம் நிதி உதவி திரட்டி வருவதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.