பிரான்ஸில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் : ஒருவர் பலி, இருவர் காயம்!
பிரான்சில் நபர் ஒருவர் சுற்றுலா பயணிகள் மீது திடீரென மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் ஈபிள் கோபுரத்திலிருந்து சுமார் 15 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ள குவாய் டி கிரெனெல் பகுதியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த தம்பதியினரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஜெர்மன் பிரஜை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை பின் தொடர்ந்து சென்ற நிலையில், அவர் மேலும் இருவரை தாக்க முற்பட்ட நிலையில், அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தாரி அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டதாகவும், ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் ஏராளமான முஸ்லிம்கள் இறந்து கொண்டிருப்பதால்" தான் வருத்தமடைந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விரைந்து செயல்பட்டிருக்காவிட்டால் மேலும் பலர் இறந்திருப்பார்கள் என அந்த நபர் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.