காஸா பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுப்படுத்தும் இஸ்ரேல்!
காஸா பகுதியில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் இஸ்ரேலியப் படைகள், தெற்கு காஸா பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை முற்றுகையிட்டு அதன் மையத்தில் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எகிப்துக்கு அருகில் உள்ள ரஃபா நகரிலும், மத்திய தரைக்கடல் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பொதுமக்கள் பாதுகாப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகள் பாதுகாப்பானவை என்று இஸ்ரேலிய இராணுவத் துண்டுப் பிரசுரங்கள் கூறினாலும், பாதுகாப்புக்கு அத்தகைய உத்தரவாதம் இல்லை என்று பாலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே நேற்று (06.12) ரஃபா நகரில் உள்ள வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். கான் யூனிஸ் மையத்தில் இஸ்ரேல் படைகளுடன் கடும் போரில் ஈடுபட்டு வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தெற்கு காசா பகுதி மட்டுமல்லாது அதன் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டதாகவும், நேற்றிரவு மத்திய காசா பகுதியில் வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் பாலஸ்தீன WAFA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.