பப்புவா நியூ கினியாவுக்கு 8 கோடி நிவாரண நிதி அளித்த இந்தியா
பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் கடும் பேரழிவு ஏற்பட்டது.
இதற்கிடையே, பேரழிவால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக பப்புவா நியூ கினியா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உடனடி நிவாரண உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.8 கோடி) இந்தியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை பேரழிவால் ஏற்படும் நெருக்கடி, பேரழிவுகளின்போது இந்தியா பப்புவா நியூ கினியாவுடன் உறுதியாக நிற்கிறது.
பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா உடனடி நிவாரண உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளின் நட்பு, மக்களிடையிலான ஒற்றுமையின் அடையாளமாக பப்புவா நியூ கினியாவில் புனரமைப்பு முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்திய அரசு நிவாரண தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது என தெரிவித்துள்ளது.