அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் மர்மநபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவரும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பிறந்த சத்யன் நாயக்(46), அமெரிக்காவில் வட கரோலினாவில் உள்ள நியூபோர்ட் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். இவர் மனைவி, இரண்டு குழந்தைகள், தாயுடன் அங்கு வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஓட்டலுக்குள் நுழைந்த மர்மநபர், சத்யன் நாயக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சத்யன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக ஹோட்டல் ஊழியர்கள், சத்யனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நியூ போர்ட் காவல் துறையினர்,விரைந்து சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டவர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவர் பெயர் டிராய் கெலும்(59) என்பது தெரிய வந்தது. வீடற்ற அவர் எதற்காக சத்யனை அவர் சுட்டுக்கொலை செய்து விட்டு தற்கொலை செய்தார் எனபொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வட கரோலினா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது