புட்டினின் முக்கிய எதிரியான அலெக்ஸி நவால்னி மாயமானதால் பதற்றம்!
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என அவரது கூட்டாளிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறைச்சாலைக்குள் அலெக்ஸி நவல்னியின் இருப்பிடம் தெரியவில்லை என்றும் வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்ற விசாரணையில் அவர் ஆஜராகவில்லை என்றும் நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அலெக்ஸி நவல்னியின் வழக்கில் அமெரிக்காவின் "தலையீடுகளை கிரெம்ளின் விமர்சித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷ்ய தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து, "அவர் முதலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடாது" என்று கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள மொஸ்கோ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “சட்டத்தின் மூலம் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு கைதியைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அவர் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். அமெரிக்கா உட்பட எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் தெரிவித்துள்ளார்.