உரையாற்றிக்கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர்
துருக்கி நாட்டில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய பெலிசிட்டி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரான 53 வயதான ஹசன் பிட்மெஸ், இஸ்ரேலுடனான துருக்கி ஆளும் கட்சியின் உறவை விமர்சித்து பேசிக் கொண்டிருந்தார்.
சுமார் 20 நிமிடம் தொடர்ந்து பேசிய அவர், திடீரென மயங்கிக் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவருக்கு சிபிஆர் சிகிச்சையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தும் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் தனது கடைசி உரையாக "வரலாற்றிலிருந்து தப்பித்தாலும், கடவுளின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது" என்று ஆளுங்கட்சியையும் இஸ்ரேலையும் விமர்சித்து பேசி தனது உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.