பணவீக்கத்திற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி புடின்
ரஷ்யாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியுள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் இருந்த முட்டை விலை இப்போது 40 வீதம் அதிகரித்துள்ளதாகவும், இது அரசாங்கத்தின் தோல்வி எனவும் அவர் கூறியுள்ளார்.
“இதற்காக தான் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், அரசாங்கத்தின் பணியில் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கான ஆண்டு இறுதி உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" தொடங்கியதைத் தொடர்ந்து மேற்கத்திய வர்த்தகக் கட்டுப்பாடுகளால் உள்நாட்டில் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.
ரஷ்ய புள்ளிவிவர நிறுவனமான ரோஸ்ஸ்டாட்டின் கூற்றுப்படி, அக்டோபர் 2023 இல் முட்டைகளின் விலை 13 வீதத்தாலும், நவம்பரில் 15 வீதத்தாலும் அதிகரித்துள்ளது. நாட்டில் தேவைகள் அதிகரித்துள்ள போதிலும், உற்பத்தி உயரவில்லை என புடின் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, 2024ஆம் ஆண்டு முதல் பாதியில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் மீதான வரியை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது நுகர்வோருக்கு செலவை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.