ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர். இதையடுத்து செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
அதன்படி செங்கடல் பகுதியில் சென்ற வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். டிரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தநிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இதில் 10 நாடுகளை இணைத்து படையை உருவாக்கி செங்கடலில் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின், பக்ரைனில் கூறியதாவது:- செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு சர்வதேச சவாலாகும். இதற்கு புதிய பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியை அறிவித்துள்ளோம்.
இதற்கான பணியில் அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பக்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் இணையும்.
சில நாடுகள் கூட்டு ரோந்து பணியை நடத்தும். மற்றவை தெற்கு செங்கடல் மற்றும் ஏமன் வளைகுடாவில் உளவுத்துறை ஆதரவை வழங்கும்