விமான நிலையங்களை முற்றுகையிட்டு பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம்
காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வான் வழியாக சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால் தினமும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவு உயிர் துறந்து வருகின்றனர். சாவு எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி விட்டது.
இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
லாஸ்ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். கையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. விமான நிலைய நுழைவு வாயிலை அவர்கள் முற்றுகையிட்டனர்.
விமான நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் கட்டிட குவியல்கள், மரக்கிளைகள், தடுப்புகள் போன்றவற்றை போட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவர்கள் தாக்கினார்கள்.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர். 45 நிமிடங்களுக்கு பிறகு விமான நிலையத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.