ஈரானில் பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை
இஸ்ரேல் நாட்டின் மொசாட் (Mossad) உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆள் கடத்தல், அச்சுறுத்துதல், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்தல், மொபைல் போன்களை திருடுதல் உட்பட பல குற்றங்களில் இவர்கள் இஸ்ரேலுக்காக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
"ஈரானுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2022 ஜனவரி மாதம் முதல் நால்வரும் ஈரான் உளவு துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிக பெரிய திட்டத்திற்காக இஸ்ரேலால் தயார் செய்யப்பட்டனர்" என ஈரான் நீதிமன்ற செய்திகளை வெளியிடும் மிசான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை பெற்ற நால்வர் - வஃபா ஹனாரெ, அரம் ஒமாரி, ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி (பெண்) ஆவர்.
கடந்த பல மாதங்களாக, தங்கள் நாட்டிற்குள் சதி வேலைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக ஈரான் குற்றம் சாட்டி வந்ததும், அந்த குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் ஒப்பு கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.