ஜப்பானில் விமான விபத்து - காணொளி வெளியீடு
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனோடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை குறைத்துக் கொண்டே வந்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கடலோர காவல்படையின் விமானத்தின் மீது மோதியது.
இதன் காரணமாக பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் பதற்ற சூழல் உருவானது. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானத்தில் 350-க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர்.
இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. எனினும், கடோலர காவல் படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்த பணியாளர்கள் ஐந்து பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில், தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து அவசரகால பலூன் வழியே பத்திரமாக கீழே இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விமானம் கொழுந்துவிட்டு எரியும் போது, பயணிகள் அதில் இருந்து வெளியேறும் காட்சிகள் பார்க்கவே பயத்தை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்பு பலூன் வழியே விமானத்தில் இருந்த 367 பயணிகள், 12 பேர் அடங்கிய பணியாளர் குழு என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் எட்டு பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடலோர காவல்படை விமானத்தில் மொத்தம் ஆறு பேர் இருந்த நிலையில், ஒருவர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.