இஸ்ரேல் - ஹமாஸ் போர் : 23000 கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை
பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டுவரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளை, காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 87வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசாமுனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 ஆயிரத்து 978 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடந்த மோதலில் 319 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.