ஹக்கா முறையில் பாராளுமன்றத்தில் உரையாடிய பெண்
நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க்.
21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது.
போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.
ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார். ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார்.
எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.