மாரடைப்பால் உயிரிழந்த சமூக வலைதள பிரபலம்
சமூக வலைதளங்களின் வழியாக பல்வேறு விஷயங்களை குறித்து தங்கள் கருத்துகளை கூறி, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் "இன்ஃப்ளுயன்சர்கள்".
முக அழகு மற்றும் உடல் தோற்றத்தை மேம்படுத்தும் குறிப்புகளுடன் வெற்றிகரமான இன்ஃப்ளுயன்சராக திகழ்ந்தவர், அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான மிலா டி ஜெசுஸ் (Mila de Jesus).
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பிறந்த மிலா, அமெரிக்க மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வந்த மிலா, சுமார் 6 வருடங்களுக்கு முன் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தொடர்ந்து, அவரது உடல் மெலிவடைந்து அவர் விரும்பிய உடல் அமைப்பை பெற்றார். மிலா, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் தனது உடல் இருந்த நிலையை புகைப்படங்களாக வெளியிட்டார்.
தனது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து விரிவாக பதிவிட்ட மிலாவை பல்லாயிரக்கணக்கான பயனர்கள் பின் தொடர்ந்தனர். இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சுமார் 60 ஆயிரம் பேரும், யூடியூப் வலைதளத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களும் மிலாவை பின் தொடர்ந்தனர்.
மேலும், மிலா பல அழகு குறிப்புகளை தொடர்ந்து பதிவுகளாக வெளியிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிலா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
தனது முந்தைய திருமண வாழ்க்கையின் மூலம் 4 குழந்தைகளுக்கு தாய் ஆன மிலா, 4 மாதங்களுக்கு முன் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிலாவின் திடீர் மாரடைப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.