எப்பவும் ஒரே மாதிரி தோசை செய்து போர் அடிக்கிறதா? இனி இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!

#SriLanka #Cooking #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
எப்பவும் ஒரே மாதிரி தோசை செய்து போர் அடிக்கிறதா?  இனி இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!

எப்போதும் ஒரே மாதிரி வெறும் தோசையை சுட்டு சட்னி செய்யாமல், அடுத்தமுறை கார முட்டை தோசையை செய்யுங்கள். முக்கியமாக இந்த கார முட்டை தோசைக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். மேலும் இந்த முட்டை தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகளும் இந்த தோசையை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் வருமாறு, 

வரமிளகாய் - 20, பூண்டு - 12 பற்கள்,  சின்ன வெங்காயம் - 15 , கல் உப்பு - 1 டீஸ்பூன் , புளி - ஒரு சிறிய துண்டு, தண்ணீர் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன்,  சீரகம் - 1/4 டீஸ்பூன், தோசை மாவு - தேவையான அளவு , நெய் - தேவையான அளவு, கார சட்னி - தேவையான அளவு, முட்டை,  உப்பு - சுவைக்கேற்ப, மிளகுத் தூள் - சுவைக்கேற்ப, பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை 

முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.  பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கல் உப்பு, புளி மற்றும் மிளகாய் ஊற வைத்த நீரை சிறிது ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.  பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை மாவைக் கொண்டு தோசை ஊற்ற வேண்டும். 

 பின் அந்த தோசையைச் சுற்றி நெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள கார சட்னியை தோசையின் மேல் தடவி விட வேண்டும்.  பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அடித்து வைத்துள்ள முட்டையை தோசையின் மேல் ஊற்றி பரப்பி, மேலே சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், நறுக்கிய வெங்காயம் சிறிது, கொத்தமல்லி சிறிது தூவி, நெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து, திருப்பிப் போட்டு மீண்டும் சிறிது நேரம் வேக வைத்து இறக்கினால், சுவையான கார முட்டை தோசை தயார்.