நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகள் தயாரா? ஜனாதிபதி கேள்வி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Development
Mayoorikka
1 month ago
நாட்டைக்  கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகள் தயாரா? ஜனாதிபதி கேள்வி

அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை நேற்று ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

 " சாரணர்கள் மட்டுமின்றி அனைவரும் நாட்டுக்காக தமது பொறுப்பை செய்ய வேண்டும். நம் அனைவரும் அதனை நிறைவேற்றுகிறோமா என்ற கேள்வி எம்முன் இருக்கிறது. அதை அரசில்வாதிகள் நிறைவேற்றுவார்களா என்பதுதான் பிரச்சினை. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அனைவரும் கஷ்டங்களை எதிர்கொண்டோம். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்ட பிறகு, அடுத்த தலைமுறைக்கு இதனை விட சிறந்த நாட்டை உருவாக்குவது தான் நம் அனைவரினதும் கடமை. இந்த நிலை மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். அரசியல்வாதிகள் அதற்கு இன்னும் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வி நம்முன் இருக்கிறது.

 அதனால் அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இன்னும் 10-15 வருடங்களில் சிறந்த நாட்டை உருவாக்க முடியும். 

இந்த நாட்டின் வருங்கால சந்ததியினருக்கான நமது கடமையாக நான் அதனைக் குறிப்பிடுவேன். தேசிய சாரணர் ஜம்போரிக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.