IPL - தொடர் தோல்விகளை பதிவு செய்யும் பெங்களூரு அணி

#IPL #T20 #Cricket #Rajasthan #Bengaluru #2024
Prasu
2 years ago
IPL - தொடர் தோல்விகளை பதிவு செய்யும் பெங்களூரு அணி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். 

அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடினர். இதனால் அணியின் ஸ்கோர் சற்று மெதுவாகவே உயர்ந்தது. போகப்போக அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். 

நடப்பு சீசனில் முதல் முறையாக 100 ரன்களை கடந்த இவர்களது பார்ட்னர்ஷிப் 125 ரன்களில் பிரிந்தது. டு பிளிஸ்சிஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி நடப்பு ஐ.பி.எல். 

தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாது நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதமாகவும் இது பதிவானது. பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள் குவித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

அதன்பிறகு ஜோஸ் பட்லருடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர். 

பின்னர் இந்த ஜோடியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 69 (42) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 4 ரன்னும், துருவ் ஜூரெல் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 100 ரன்களும், ஹெட்மயர் 11 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

ஜோஸ்பட்லர் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றி பெற்று தந்ததுடன், தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இது விராட் கோலி அடித்த சதத்திற்கு பதிலடியாக அமைந்தது. 

இறுதியில் ராஜஸ்தான் அணி 19.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் டாப்லி 2 விக்கெட்டுகளும், யாஸ் தயாள் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

 இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4