ஈராக்கில் 11 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். அமைப்பை 2017-ம் ஆண்டில் ஈராக் படைகள் தோற்கடித்த பிறகு, நூற்றுக்கணக்கான ஐ.எஸ். ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் பலர் ஈராக்கில் அல்லது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.
அவ்வகையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நசிரியா மத்திய சிறைச்சாலையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து சட்ட நடைமுறைகளையும் நிறைவு செய்தபின், நீதித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் மரண தண்டனை 2003-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.