இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் - 2000 பல்கலைக்கழக மாணவர்கள் கைது
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன. இதனால் பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போராட்டக்களமாக மாறி உள்ளன.
இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுகின்றனர். போராட்டத்தை தடுக்க பல்கலைக்கழகங்களில் கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புளோரிடா உள்ளிட்ட சில பகுதிகளில் போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். மேலும் சில இடங்களில் போலீசார் வன்முறையை கையாள்வதாகவும், போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கையாளும் விதம் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அங்குள்ள தனியார் செய்தி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.