இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திய துருக்கி அரசு
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், காசாவின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியிருக்கிறது.
இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்பதால் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்காக இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றன. இந்நிலையில், காசாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதாலும், இஸ்ரேலால் ஏற்படும் பாதிப்புகள் நீடிப்பதாலும் இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இஸ்ரேலுக்கான ஏற்றுமதியில் கடந்த மாதம் துருக்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளது.