போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு - 4 பேர் பலி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் சாமன் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நோக்கி பாகிஸ்தானின் துணை ராணுவ படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்கு தீ வைத்ததுடன், 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தும் சென்றனர்.
ஸ்பின் போல்தக்-சாமன் எல்லை பகுதியில் தடையை ஏற்படுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் ஏற்று கொள்ள முடியாதது என சாமன் போராட்ட இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் மற்றும் ஆலோசகரான மவுலானா முகமது யூசுப் கூறியுள்ளார். காயமடைந்தவர்களில் சிலர் குவெட்டா நகருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் அரசின் இந்த செயலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். சாமன் பகுதி மக்களின் வேண்டுகோளை சட்டரீதியாக அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு, போராடுவது மற்றும் அமைதியாக கூடுவதற்கான பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் ஆகும் என பிரபல பலூச் ஆர்வலரான மஹ்ரங் பலூச் தெரிவித்து இருக்கிறார்.
அந்த பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.