ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகளை அவமானப்படுத்திய ஏர் பெல்ஜியம் விமானிகள்!

#SriLanka #Flight #Airport
Mayoorikka
1 week ago
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்  விமானிகளை  அவமானப்படுத்திய ஏர் பெல்ஜியம் விமானிகள்!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியம் விமானியும் விமான பணியாளரும் தங்களை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார்கள் இனப்பாரபட்சத்தை வெளிப்படுத்தினார்கள் என ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகளும் பணியாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பாரிய இனவெறி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

 இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏப்பிரல் 30ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலத்த நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனது விமானசேவையை வலுப்படுத்துவதற்காக டிசம்பரில் பெல்ஜியத்திடமிருந்து இரண்டு விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொண்டது. இந்த விமானங்கள் கொழும்பிலிருந்து பிராங்பேர்ட் டாக்கா துபாய் பாரிஸ் சென்னை விமானநிலையங்களிற்கு பயணிக்கின்றன.

 இந்த விமானத்தில் பெல்ஜியம் விமானிகளுடன் இலங்கையை சேர்ந்த விமானிகளும் விமானபணியாளர்களும் காணப்படுவார்கள். ஏப்பிரல் 30 திகதி குறிப்பிட்ட விமானம் கொழும்பிலிருந்து பிரான்ஸ் தலைநகருக்கு செல்வதற்காக கொழும்பு விமானநிலையத்தில் தயாராகயிருந்தவேளை இலங்கையை சேர்ந்த விமானிகளிற்கு பிசினஸ் கிளாசில் ஆசனங்களை ஒதுக்கவில்லை என அறிவித்துள்ளனர்- 

அந்த பிரிவில் ஒரு ஆசனம் மாத்திரம் உள்ளதால் ஆசனங்களை ஒதுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். விமானத்தை மீள செலுத்திவருவதற்காக விமானிகள் வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ளும்போது விமானிகளுக்கு பிசினஸ் கிளாசில் ஆசனங்களை ஒதுக்குவதே வழமை . இதேவேளை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான பணியாளர்களிற்கு அறிவிக்காமல் எயர்பெல்ஜியத்தை சேர்ந்த விமான பணியாளருக்கு பிசினஸ் கிளாசில் ஆசனத்தை வழங்கியுள்ளனர். விமானத்தில் ஏறுவதற்காக விமானத்தை நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் இதனை அறிந்ததும் விமானத்தில் ஏற மறுத்துள்ளனர். இலங்கை விமானிகள் விமானத்தில் ஏற மறுத்தவேளை யுஎல் 501 இன் விமானியான கப்டன் பிலிப்பே எனெக்கென் இலங்கை விமானிகளை இனரீதியில் நிந்தித்துள்ளார்.

 ஐந்துநிமிடத்திற்குள் அவர்கள் விமானத்தில் ஏறாவிட்டால் அவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். இலங்கை விமானிகளை ஆபாசவார்த்தைகளால் நிந்தித்த எயர்பெல்ஜியம் விமானி விமானத்திற்குள் சென்றுள்ளார். பின்னர் அவர் பயணிகளுக்கான அறிவித்தலில் பெரிய பருமனான கப்டன் உட்பட இலங்கை விமானிகள் ஆசனங்களிற்காக அடம்பிடிப்பதால் விமானத்தின் பயணம் தாமதமாகின்றது என அறிவித்துள்ளார்.

 இதனை செவிமடுத்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதமநிறைவேற்று அதிகாரி உட்பட பல அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளனர்.