பிரேசிலில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டின் சான்டா கேட்டரினா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், நேற்று முன்தினம் மாலை மினாஸ் ஜெராயிஸ் மாநிலம் கவர்னடார் வாலடேர்ஸ் நகரில் இருந்து சான்டா கேட்டரினா தலைநகர் புளோரியானோபொலிஸ் நகர் நோக்கி சென்றது.
இடாபோவா நகரின் அருகில் சென்றபோது, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.
ஆனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தபோது, விமான நிலையத்தை தாண்டி மரங்கள் அடர்ந்த பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
ஜாயின்வில்லி விமான நிலையத்துடன் விமானி தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க முயற்சித்தது ஏன்? என்பது குறித்து விமானப்படை விசாரித்து வருகிறது.