மனித குலத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் கோனோகார்பஸ் மரம்
கோனோகார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து உள்ளது. ஆரம்பத்திலேயே பெருகவிடாமல் தடுப்பது நல்லது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
கூம்பு வடிவத்தில் வளரக்கூடிய கோனோகார்பஸ் மரங்கள் இந்தியா, பாகிஸ்தான், அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக வளர்க்கப்படுகின்றன.
மரத்தின் வலுவான வேர்கள், நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதுடன், குடிநீர் குழாய்கள், வடிகால்களை சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது. பச்சை பசுமையாக பார்ப்பதற்கு அழகாக காட்சியளித்தாலும், பாதிப்பை கொடுக்கும் என்பதே உண்மை.
வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியர்,முதலில் வெளிநாட்டு தாவரங்களை அறிமுகப்படுத்தும்போது, அது நம் மண்ணுக்கும் மக்களுக்கும் உகந்ததாக இருக்குமா என்பதை, முதலில் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோனோகார்பஸில், 2 வகையான மரங்கள் வளர்கின்றன. சுமார், ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாக சுமார் 10 அடிக்கும் மேல் வளரும் தன்மை கொண்டவை.
இந்த வகை மரங்கள், மண்ணின் ஈரப்பதத்தை அதிகளவில் உறிஞ்சுவதோடு, குழாய்கள், பெரிய பைப்புகளின் உள்ளே சென்று, பெரும் சேதம் ஏற்படுத்துகின்றன.
அதேசமயம், நீண்ட நேரம் இந்த மரத்தின் அருகில் நிற்கும்போது, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் மற்றும் தோல் அலர்ஜியும் ஏற்படலாம்.
மண்ணுக்கும், மனிதர்களுக்கும் பிரச்னை ஏற்படுத்தும் இந்த தாவரத்தை, ஆரம்பத்திலேயே பெருக விடாமல் தடுப்பது நல்லது.
கோனோகார்பஸ் எங்கிருந்து வந்தது?
கோனோகார்பஸ் என்பது அமெரிக்காவின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.
இது வட அமெரிக்காவின் ஃபுளோரிடாவின் கடலோர பகுதியில் வளரும் ஒரு சதுப்புநில தாவரமாகும். வேகமாகவும், உயரமாகவும், பச்சையாகவும் இது வளரும்.
ஆரம்பத்தில், பாலைவனத்தில் இருந்து வரும் தூசி, மணல் புயல்கள், வேகமாக வீசும் அனல் காற்று போன்றவற்றுக்கு தடையை ஏற்படுத்தும் விதமாக அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த செடிகள் பரவலாக நடப்பட்டன.