பால்டிமோர் துறைமுக சேவைகள் மீண்டும் ஆரம்பம்
அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் ஆற்றின் குறுக்கே சுமார் 2.6 கி.மீட்டர் தூரத்திற்கு மிகப் பிரமாண்ட பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் கட்டப்பட்டிருந்தது.
இந்த பாலத்தை கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி 984 அடி நீளம் கொண்ட ராட்சத சரக்கு கப்பல் கடந்து செல்லும்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாலத்தின் ஒரு பகுதியில் இடித்தது.
இதனால் பாலத்தின் பெரும்பகுதி (சுமார் 700 அடி) சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இதனால் அமெரிக்காவின் முக்கியமான சரக்கு துறைமுகமாக விளங்கிய பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் செல்வது தடைபட்டது.
இந்த பாலத்தின் கம்பிகள் மற்றும் கான்கிரீட் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி தொடர்நது நடைபெற்று வந்தது.
மேலும் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடர பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 11 வாரங்களுக்குப் பிறகு இன்று பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல்கள் அந்த வழியாக செல்லும் வகையில் பாதை மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த பாலம் விழுந்ததால் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பால்டிமோர் மாகாணத்தில் இழப்பை ஏற்படுத்தியதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
2023-ல் பால்டிமோர் சரக்குகளை கையாண்டதில் அமெரிக்காவின் முதன்மை துறைமுகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
பாலம் விழுந்ததில் 6 கட்டுமான தொழிலாளர்கள் பலியானார்கள். 50 ஆயிரம் டன் இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட் அகற்றப்பட்டது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இன்ஜினீயர்கள் மற்றும் வல்லுனர்கள் இந்த பணியில் இரவு பகலுமாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.