வலதுசாரி எழுச்சியை நோக்கி ஐரோப்பாக் கண்டம்? சுவிசிலிருந்து சண் தவராஜா

#Election #European union #parties #European #Swiss #Vote
Prasu
5 months ago
வலதுசாரி எழுச்சியை நோக்கி ஐரோப்பாக் கண்டம்? சுவிசிலிருந்து சண் தவராஜா

ஐரோப்பிய பாரளுமன்றத்துக்கான தேர்தலில் வலதுசாரிக் கட்சிகளும் தீவிர வலதுசாரிக் கட்சிகளும் மேலும் அதிக இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. 

720 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இந்தக் கட்சிகள் 146 ஆசனங்களைப் பெற்றுள்ளன. 

‘இத்தாலியின் சகோதரர்கள்‘ கட்சியின் தலைமையிலான ஐரோப்பியப் பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் கட்சி, பிரான்சைத் தளமாகக் கொண்ட ‘தேசியப் பேரணி‘ கட்சியின் தலைமையிலான அடையளமும் ஜனநாயகமும் கட்சி, யேர்மனியைத் தளமாகக் கொண்ட ‘யேர்மனிக்கான மாற்று‘ ஆகிய கட்சிகள் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளன. 

வேறு வகையில் சொல்வதானால் இந்த வெற்றி மொத்த ஆசனங்களுள் ஐந்தில் ஒரு பங்காக உள்ளது. இது முன்னைய எண்ணிக்கையை விடவும் 28 ஆசனங்கள் அதிகமாகும். அதேவேளை, சமூக ஐனநாயக மற்றும் லிபரல் கட்சிகளுக்கு இது ஒரு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.

images/content-image/1718699085.jpg

இந்தத் தேர்தல் முடிவுகளின் எதிரொலி இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றிலும் பலமாகக் கேட்கத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது. யூன் 30 முதல் யூலை 7ஆம் திகதி வரை அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலிலும் புதிய தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளமை தற்போதைய ஆளுங் கட்சியினருக்குக் கூட அதிர்ச்சிதரும் செய்தியாக அமைந்துள்ளமையை செய்திகள் வாயிலாக அறிய முடிகின்றது.

யேர்மனியின் ஆளுங் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி கடந்த 137 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியால் 13.7 விழுக்காடு வாக்குகளையே பெற முடிந்திருந்தது. 

images/content-image/1718699096.jpg

2019ஆம் ஆண்டுத் தேர்தலில் 11.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்த கூட்டணிக் கட்சியான பசுமைக் கூட்டணி 8.6 விழுக்காடு வாக்குளையும், மற்றொரு கூட்டணிக் கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சி 5.2 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளது.

மொத்தத்தில் ஆளுங் கூட்டணி 31 விழுக்காடு வாக்குகளையே பெற்றுள்ளது. கிறிஸ்வத ஜனநாயகக் கட்சிக் கூட்டணி 30 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற இந்தத் தேர்தலில் யேர்மனிக்கான மாற்றுக் கட்சி 15.9 விழுக்காடு வாக்குளைப் பெற்றுள்ளது.

பிரான்சைப் பொறுத்தவரை மரி லீ பென் அங்கம் வகிக்கும் தேசியப் பேரணி, ஆளும் அரசுத் தலைவர் இம்மானுவல் மக்ரோனின் கட்சியைத் தோற்கடித்து 31.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. 

images/content-image/1718699110.jpg

மக்ரோன் தலைமையிலான கட்சி 14.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மண் கவ்வியுள்ள அதேவேளை, பிரான்ஸ் சோசலிசக் கட்சியால் 13.9 விழுக்காடு வாக்குகளையும், ஜீன்-லக் மலன்சோன் தலைமையிலான கட்சியால் 9.9 விழுக்காடு வாக்குகளையுமே பெற முடிந்தது.

நடைபெற்று முடிந்த ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் எழுச்சி பெற்றதும் சமூக ஜனநாயக மற்றும் லிபரல் கட்சிகள் சரிவைச் சந்தித்ததும் எதனால்? ஐரோப்பிய மக்கள் வலதுசாரித் தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டுள்ளார்களா? தமது வழக்கமான கொள்கைகளில் இருந்து விலகத் தொடங்கி விட்டார்களா? ‘ஜனநாயகத்தின் தொட்டில்‘ என வர்ணிக்கப்படும் ஐரோப்பா தனது நிறத்தை மாற்றிக் கொள்ளத் தயாராகி விட்டதா? ஐரோப்பாவைப் பொறுத்தவரை வலதுசாரிக் கட்சிகளாக இருந்தாலும் இடதுசாரிக் கட்சிகளாக இருந்தாலும் அவை யுத்தங்களை ஆதரிப்பவையே.

images/content-image/1718699124.jpg

தற்போது பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இன அழிப்பு யுத்தத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. அதேபோன்று உக்ரைனில் ரஸ்யா மேற்கொண்டுவரும் போரிலும் உக்ரைன் தரப்பையே பெரும்பாலான கட்சிகள் ஆதரிக்கின்றன. 

ஆனால் ஐரோப்பாக் கண்டத்தின் பெரும்பாலான பொதுமக்கள் இரண்டு போர்களிலும் அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரித்து நிற்கும் தரப்புகளுக்கு எதிரான தரப்பையே ஆதரிக்கின்றார்கள். 

பலஸ்தீனப் போரில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகளைக் கண்டிக்கும் மக்கள், உக்ரைன் போரை மூன்றாம் உலகப் போராக விரிவடையச் செய்யக் கூடிய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

images/content-image/1718699139.jpg

ஐரோப்பாவில் வாழும் இன்றைய தலைமுறை இரண்டாம் உலகப் போர் தொடர்பில் நேரடி அனுபவங்களைக் கொண்டிருக்கவில்லை ஆயினும் தமது மூதாதையரின் அனுபவங்களைக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். அவை தொடர்பான செய்திகளையும், காணொளிகளையும், திரைப்படங்களையும் பார்த்திருக்கிறார்கள். 

எனவே போர் தீது நிறைந்தது என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது. அது மாத்திரமன்றி, உக்ரைன் நெருக்கடி ஆரம்பமான நாள் முதலாக ஐரோப்பிய மக்கள் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகி உள்ளனர். 

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பாவனைப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. வேதனங்கள் அதிகரிக்காத நிலையில் அனைத்து மக்களும் இந்தச் சுமைகளைச் சுமக்க வேண்டி உள்ளது. 

images/content-image/1718699167.jpg

தவிர, உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கப்படும் பெரும் பொருட் செலவிலான உதவிகள், ஆயுத தளபாடங்கள் என்பவற்றுக்கான நிதி மக்களின் வரிப்பணத்தில் இருந்தே செல்கின்றது. இயல்பான சூழலில் வளமான வாழ்ககையை வாழ நினைக்கும் ஐரோப்பியர்களுக்கு இத்தகைய சூழல் பொருத்தமற்றது.

அதன் விளைவே, ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் தத்தமது நாட்டில் ஆளுங் கட்சிகளுக்கு அவர்கள் அளித்துள்ள அதிர்ச்சி வைத்தியம். தேர்தல் முடிவுகளின் விளைவாக பிரான்சில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான ஏதுநிலை உருவாகி உள்ளது. 

லி பென் அம்மையாரைப் பொறுத்தவரை உக்ரைன் போரில் பிரான்ஸ் படைகளை ஈடுபடுத்துவது என்ற அரசுத் தலைவர் மக்ரோனின் ஆலோசனையை அவர் எதிர்த்து வருகிறார். அது மாத்திரமன்றி ரஸ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையும் அவர் பெரிதும் ஆதரிக்கவில்லை.

images/content-image/1718699185.jpg

இந்நிலையில் லி பென் தலைமையிலான வலதுசாரிக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமானால் மக்ரோனின் ஆட்சி இலகுவானதாக அமையாது என்பதே யதார்த்தம். யேர்மனியைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் ஆளுங் கட்சிக் கூட்டணிக்குப் பாரிய அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் வலதுசாரிகளின் எழுச்சி என்பது ஒலப் சொலாஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கவனத்துக்குரிய ஒரு விடயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலக நாடுகளைப் பொறுத்தவரை மக்கள் வாக்களிக்கும் பாங்கை வரையறுத்துச் சொல்லிவிட முடியாத நிலையே உள்ளது. தென்னமெரிக்காவில் தொடர்ச்சியாக இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் வெற்றிகளைப் பெற்றுவர ஐரோப்பாவில் வலதுசாரிகள் வெற்றி பெறுவதைக் காண்கிறோம்.

இது ஒரு பிராந்திய அலையாக உள்ளதா எனப் பார்த்தால் திடீரெனக் காட்சி மாற்றம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது. பொதுவாகச் சொல்வதானால் மக்கள் தமக்குப் பிடித்தமான கொள்கைக்கும் பிடித்தமான தலைவர்களுக்கும் மாத்திரம் வாக்களிப்பதில்லை. 

தமக்குப் பிடிக்காத தலைவர்களின் எதிராளிகளுக்கும் வாக்களிக்கிறார்கள். ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளையும் அத்தகைய கோணத்தில் பார்க்க முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!