சூப்பர் ஓவர் முறையில் கடைசி போட்டியையும் வென்ற இந்திய அணி
இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது.
இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன் ஊடாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்று கொண்டது.
இந்திய அணி சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார் பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி, 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். இந்நிலையில், சூப்பர் ஓவரில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அதன்படி, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.