குடியுரிமையை இழக்க நேரிடும்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக தொகையை செலவிட்டமை கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
அவர்கள் தங்கள் பதவிகளை இழக்கநேரிடலாம், பிரஜாவுரிமை பறிக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவடைந்து 21 நாட்களிற்குள் அவர்களின் வருமானம் மற்றும் அவர்களின் செலவீனஙகள் குறித்து வேட்பாளர்கள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.
அவர் இந்த அறிக்கைகளை செய்தித்தாள்கள் இணையங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வழங்கிய தகவல்களில் தவறு காணப்பட்டால் பொதுமக்கள் இது குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கலாம், உரிய நடவடிக்கையை எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2,098 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 754 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,266 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 64 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.