நம்பிக்கைக்கு உரியனவா நம் கையில் உள்ள இலத்திரனியல் உபகரணங்கள்? சுவிசிலிருந்து சண் தவராஜா

#SriLanka
Mayoorikka
2 months ago
நம்பிக்கைக்கு உரியனவா நம் கையில் உள்ள இலத்திரனியல் உபகரணங்கள்? சுவிசிலிருந்து சண் தவராஜா

லெபனான் நாட்டில் பேஜர், வாக்கி டோக்கி, கைப்பேசிகள் மற்றும் மடிக் கணணிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்புச் சாதனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகளாவிய அடிப்படையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

இஸ்ரேலிய உளவுப் பிரிவினால் ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகக் கருதப்பட்டாலும் பொதுமக்கள் பலரும் இவற்றில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 தாக்குதல்களுக்கு இஸ்ரேல் உரிமை கோராத போதிலும் இந்தத் தாக்குதலின் பின்னணியை ஊகிக்க பெரிதும் சிரமப்பட வேண்டியதில்லை. இஸ்ரேலின் ஆதரவாளர்கள் இது தொடர்பில் வெளியிட்ட செய்திகளே இதனை ஊகிக்கப் போதுமானவை.

 இஸ்ரேலிய உளவுப் பிரிவின் திறமையை இந்தத் தாக்குதல் வெளிப்படுத்துவதாக ஒரு தரப்பினர் இதனைக் கொண்டாடிவரும் நிலையில் இது ஒரு போர்க்குற்றம் என மறு தரப்பினர் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரித்துவரும் அமெரிக்கா - வழக்கம் போலவே - இது விடயத்தில் தனக்கு எதுவும் தெரியாது எனக் கையை விரித்துள்ளது. அதேவேளை, பொதுமக்களின் அன்றாட பாவனைப் பொருட்களான திறன்பேசி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களின் பாதுகாப்பு தொடர்பிலான கவலையையும் தோற்றுவித்துள்ளது. 

தவிர, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள போர்களின் போக்கு தொடர்பிலான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. இலத்திரனியல் பொருட்களை குறிப்பாக தொலைத் தொடர்புச் சாதனங்களைப் பாவிக்காத மனிதர்கள் எவரும் உலகில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

 கைப்பேசி என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவே ஆகிவிட்ட நிலையில் நம் கையில் இருப்பது நமது மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு கருவி என்ற சிந்தனை உருவாகுமானால் நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா? கருவிகளை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்கள் எமக்குப் பாதிப்பை ஏற்படுத்த மாட்டா என்ற நம்பிக்கையில்தான் அன்றாடம் சந்தையில் அறிமுகமாகும் புதிய புதிய பொருட்களை மனிதர்கள் கொள்வனவு செய்கிறார்கள். 

உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களை அச்சுறுத்தியோ அல்லது நிறுவனங்களுக்குத் தெரியாமலோ உற்பத்தியாகும் கருவிகளில் வெடிப்பொருட்களைப் பொருத்த முடியும் என்ற போக்கு எத்துணை அபாயகரமானது? இத்தகைய போக்கைத் தடுத்துவிட முடியுமா? தடுப்பது யார்? செப்டெம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தொலைத்தொடர்புச் சாதனங்கள் வெடித்துச் சிதறின. 

ஏக காலத்தில் வெடித்த இந்தக் கருவிகளால் 37 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் மூவாயிரம் வரையானோர் காயங்களுக்கும் உள்ளாகினர். படுகாயங்களுக்கு உள்ளாகிய பலர் தங்கள் பார்வையை இழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

 பாதிக்கப்பட்டடோரில் ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்தோரும் குழந்தைகள் உட்படப் பொதுமக்களும் அடங்குவர். காயமடைந்தோரில் லெபனானுக்கான ஈரானியத் தூதுவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே லெபனான் மீதான விமானக் குண்டுத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக லெபனானில் வாழும் பெரும்பாலோனோரின் கைப்பேசிகளுக்கு அவர்களை ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் நிலைகளில் இருந்து விலகி இருக்குமாறு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு சிலரின் வீட்டுத் தொலைபேசிகளுக்கும் அழைப்புகள் ஊடாக இதே தகவல் பரிமாறப்பட்டு உள்ளது.

 இதனைத் தொடர்ந்து லெபனானில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் இஸ்ரேல் ஊடுருவி, தகவல்களைத் திரட்டியுள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை உலகின் பல நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால், அதேயளவு காத்திரத்துடன் தொலைத்தொடர்புச் சாதனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 தொலைத்தொடர்புச் சாதனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான தயாரிப்புகளை இஸ்ரேல் பல வருடங்களுக்கு முன்னரேயே திட்டமிட்டு வைத்திருந்ததாக தற்போது வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் இது போர்க் குற்றம் எனத் தெரிந்தே இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 தற்போதைய உலக அரங்கில் புதிய சொல்லாடல் ஒன்று அண்மைக் காலமாகப் பாவனையில் உள்ளது. அது 'இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்' இந்தத் தாக்குதலின் நோக்கம் எதிரியைக் கொல்வதே. தனது எதிரிகள் என நினைக்கும் எவரையும் தேசம் கடந்து, நாடு கடந்து, கண்டம் கடந்து கொலை செய்யும் இந்த நடைமுறையை ஆரம்பித்து வைத்ததே இஸ்ரேல்தான். 

இதனைக் கச்சிதமாகப் பின்பற்றிவரும் இன்னோரு நாடு என்றால் அது அமெரிக்கா. வெடிகுண்டுகள், எறிகணைகள், ட்ரோன்கள், செய்மதிகள் என தன்னிடம் உள்ள தொழில்நுட்ப அறிவைக் கொண்டு 'எதிரிகளைக்' கண்டறிந்து அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்கா. போர்ப் பிரதேசங்களிலும், போர் நடைபெறாத பிரதேசங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இத்தகைய தாக்குதல்களில் அமெரிக்காவின் 'எதிரிகள்' மாத்திரமன்றி பொது மக்களும் கூட உயிர் துறக்க வேண்டியேற்பட்டதை நாமறிவோம்.

 தற்போது தொலைத் தொடர்புச் சாதனங்களை இலக்குவைத்து இஸ்ரேலினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தாக்குதல் உத்தியை இனிவரும் காலங்களில் அமெரிக்காவும் பயன்படுத்தும் என நிச்சயம் நம்பலாம். அத்தகைய ஒரு நிலை உருவானால் அமெரிக்காவின் 'எதிரிகள்' மாத்திரமன்றி எம்மைப்போன்ற சாதாரண மனிதர்களும் கூட பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 இன்றைய உலகில் தனிநபர்களின் தகவல்களைத் திரட்டுதல், கண்காணிக்கப்படுதல் தொடர்பாக அதிகம் பேசப்படுகின்றது. வியாபார நோக்கங்களுக்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகச் செய்திகள் வெளிவந்தாலும் அதற்கும் அப்பால் இத்தகைய கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை மறுத்துவிட முடியாது.

 ரெலிகிராம் என்ற செயலியைப் புயன்படுத்துவோரின் தகவல்களை தந்துதவ மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டில் அதன் நிறுவனர் பவல் டுரோவ் அண்மையில் பிரான்ஸ் நாட்டில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டதை நாம் அறிவோம். அவரின் விடுதலையைத் தொடர்ந்து வெளிவந்த செய்திகள் அவர் தனது செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களை அரசாங்கங்களுடன் பகிர்ந்து கொள்ள இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கின்றன. 

இது போன்று ஏனைய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தால் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இலகுவில் கண்காணிக்கப்படவும் இலக்கு வைக்கப்படவும் ஏதுநிலை உருவாகலாம் என்பது சொல்லாமலேயே புரியும். இத்தகைய பின்னணியில் வெனிசுவேலா நாட்டின் அதிபர் நிக்கலஸ் மடுரோ கிறிஸ்மஸ் பரிசுகளாக இலத்திரனியல் உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தனது அரச சகாக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

 ''இலத்திரனியல் பொருட்களைப் பரிசாகப் பெறவேண்டாம். தெலைபேசிகள், கைப்பேசிகள் என்பவை தொடர்பில் அனைவரும் அவதானமாக இருங்கள். லெபனானில் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தீர்கள். ஆகவே அனைவரும் அவதானமாக இருங்கள்'' என்பதே அவரின் செய்தி. அமெரிக்காவினால் விரோதியாகக் கருதப்படும் நிலையில் மடுரோவின் எச்சரிக்கை கவனத்துக்கு உரியது. 

இது போன்ற எச்சரிக்கைகளை அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் விரோதி நாடுகள் எனக் கருதப்படும் நாடுகளும் ஏலவே விடுத்திருக்கக் கூடும். ஆனால் அவை செய்திகளில் இதுவரை வெளிவரவில்லை. வல்லரசு நாடுகள் தத்தமக்கென இலத்திரனியல் உபகரணங்களை உற்பத்தி செய்யும் வல்லமையைக் கொண்டுள்ளன. 

ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அத்தகைய வல்லமையைக் கொண்டனவல்ல. இதுபோன்ற தேவைகளுக்காக ஏனைய நாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் அந்த நாடுகளுக்கு உள்ளது. லெபனான் ஹிஸ்புல்லாக் குழுவினர் இதுபோன்ற தாக்குதல்கள் தம்மீது நடத்தப்படலாம் என்று எதிர்பார்த்தே இருந்தனர். 

அவர்களது எதிர்பார்ப்பு எல்லாம் தங்கள் செல்லிடப் பேசி கண்காணிக்கப்படலாம், அவற்றை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதாகவே இருந்தது. அதனாலேயே அவர்கள் பழைய தயாரிப்புகளான பேஜர், வாக்கி டோக்கி என்பவற்றைப் பாவிக்க முனைந்தனர். தற்போது அவை கூடத் தாக்குதல் கருவிகளாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் அவர்களது எதிர்காலத் தொடர்பாடல் கேள்ளவிகுறியாக மாறியுள்ளது.

 ஒரு ஆயுத மோதலின் போது, மோதலில் ஈடுபடாத பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை பன்னாட்டு மனிதாபிமானச் சட்டம் வரையறை செய்துள்ளது. அதேபோன்று 1996இல் அறிமுகம் செய்யப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் பொறி வெடிகளின் பாவனைக்கு எதிரான சட்டம் இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை எதிர்க்கிறது.

 ஆனால் சட்டத்தை மதித்து நடக்கும் அரசாங்கங்களுக்கே இவை பொருந்தும். உலகின் மனச்சாட்சியைக் கணக்கில் கொள்ளாத இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இவை செவிடன் காதில் ஊதிய சங்குக்குச் சமனானது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் விசேட ஆதரவுடன் வவம்வரும் இஸ்ரேல் பன்னாட்டுச் சட்டங்களைக் கணக்கில் கொள்ளாது இது போன்ற இன்னும் பல தாக்குதல்களை எதிர்காலத்தில் நடத்தும் வாய்ப்பே அதிகம் தென்படுகிறது.

-சுவிசிலிருந்து சண் தவராஜா-


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!