மாத்தறையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கான தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
மாத்தறை நில்வலா உப்புத் தடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கான காரணங்களை கண்டறிந்து உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மாத்தறை நில்வலா ஆற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உப்புத் தடுப்பினால் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு, வயல்களுக்குள் உப்பு உட்புகுவதால் பயிர்கள் சேதமடைவதற்கான உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கட்டப்பட்ட உப்புத் தடுப்பால் விவசாய நிலங்களுக்கு உப்பு நீர் வருவதைப் போல வெள்ளச் சூழல் ஏற்படுமா என்பதற்கு முறையான ஆய்வுக்குப் பிறகு நிரந்தரத் தீர்வுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் ஆதரவைப் பெற்று இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வுகளை முன்வைக்க முன்மொழியப்பட்ட பிரேரணைக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒப்புதல் வழங்கியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் சபை இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.