மன்னார் மக்களுக்கு எதிரான வழக்கை மீளப்பெற்ற பொலிஸார்!
மன்னாரில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அள்ளுவதற்கு சர்வதேச நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் நோக்கில், ஆய்வுகளுக்கு வந்த அரச அதிகாரிகள் தலைமையிலான முதலீட்டாளர்களை எதிர்த்த கிராம மக்களுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாடிய பொலிஸார், நீதிமன்றில் செய்த முறைப்பாட்டினை மீளப் பெற்றுள்ளனர்.
நில அளவை திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், மன்னார் மாவட்ட உதவி செயலாளர் உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (நவம்பர் 06), டைட்டேனியம் அகழ்விற்காக மாதிரிகளை எடுக்கும் நோக்கில், மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓலைத்தொடுவாய், வள நகர் பிரதேசத்திற்கு சென்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பெண், "நீங்கள் இங்கு சோதனை செய்ய தேவையில்லை, நீங்கள் இங்கு வரத் தேவையில்லை,” என தமிழில் அதிகாரிகளிடம் கூறினார்.
பாரியளவிலான கனிய மணல் அகழ்விற்கான ஐந்து உரிமங்களைப் பெறுவதற்கு இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட டை்டேனியம் சேன்ஸ் (Titanium Sands) நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
இம்மாத முற்பகுதியில் கிடைத்த அனுமதிக்கு அமைய, இலங்கை முதலீட்டுச் சபையின் வெளிநாட்டு முதலீட்டாளர் அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட வர்த்தக நிறுவனம் ஒரியன் மினரல்ஸ் (தனியார்) நிறுவனமாகும்.
“முதலீட்டு சபையின் வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் இந்தப் பணியில் பெரும் உதவியாக அமைந்துள்ளது. புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் ஒப்புதல் மற்றும் ஒரியன் பெயரில் அனுமதி வழங்கியமை ஆகியவை அகழ்விற்காக விண்ணப்பிப்பதற்கான வேகத்திற்கு உதவியது. அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் முடிவுகள் நிறுவனத்திற்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை தரும்,” என டைட்டேனியம் சேன்ஸ் நிர்வாக பணிப்பாளர் பேராசிரியர் ஜேம்ஸ் சியர்ல் கூறியுள்ளார்.
உள்ளூர் மக்கள் இந்த திட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றார்கள் என வள நகர் குடியிருப்பாளர் ஆங்கிலத்தில் கூறியபோது, ஒரியன் மினரல்ஸ் பிரதிநிதி ஒருவர், 'நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, நாங்கள் வாதிட விரும்பவில்லை' என்றார்.
டைட்டேனியம் சேன்ஸ் முதலீட்டில் இருந்து எதிர்பார்க்கப்படும் வருமானம் இரண்டு பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் எனவும், வருடாந்தம் 150,000 தொன் கனிய மணலை அகழ்ந்து எடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அகழ்வு தொடர்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவமுள்ள புவியியலாளர் டக் பிரைட் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 122 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் சர்வதேச அளவில் இல்மனைட் உற்பத்தியாளர்கள் ஊடாக 600 உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மன்னார் புதிய காற்றாலைத் திட்டத்தால் உயிரிழப்பை அனுபவித்த கிராம மக்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் இணைந்து இந்த முதலீட்டினால் தாங்கள் மேலும் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் எனத் தெரிவித்து அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடன் குறித்த காலக்கெடுவிற்கு முன்னதாகவே பணிகள் நிறைவடைந்ததாக அரசாங்கம் பெருமை பேசும், மன்னார் புதிய காற்றாலையால் தாம் ஏற்கனவே அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்து பிரதேச பெண்ணான டியுட் தவராணி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
“இந்த காற்றாலை வந்தபோது சொன்னார்கள், நாங்கள் செக் பண்ணிட்டு உங்களுக்கு பாதகமாக விளைவுகள் வராது நாங்கள் அப்படியான பாதகமான ஒரு விளையை அரசாங்கம் தரப்போவது இல்லை என்றார்கள். எனினும் அதனை நம்பி நாம் இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம். இன்று எங்கள் கிராமத்தில் மழை பெய்தால் மூன்று மாதங்கள் நாங்கள் கோயில் அல்லது மண்டபத்தில் இருக்க வேண்டும். காற்றாலை மின்சாரம், மண் அகழ்வு இவைகளால்தான் நாங்கள் இன்று அவதிப்படுகின்றோம்.”
இதுபோன்ற சூழ்நிலையில் வெளியாட்கள் யாரும் தங்கள் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்களென, டியுட் தவராணி உறுதியாகக் கூறினார். உள்ளூர்வாசிகளின் அனுமதியின்றி ஆரம்பிக்கப்படும் பெரிய அளவிலான முதலீடுகள் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு அழிக்கும் என்பது குறித்தும் அவர் எச்சரித்தார்.
“இந்த இடத்திற்கு யாரும் வர முடியாது. வந்தாலும் இறங்கவிடமாட்டோம். இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வை தர வேண்டும். முதலிலேயே நாங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனின், வந்து பரிசோதனை ஒன்றை செய்து ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுவிடுவார்கள். அதன் பின்னர் மக்களின் ஆதரவுடன்தான் நாங்கள் வந்தோம். மண்ணை பரிசோதனை செய்துவிட்டோம் என சொல்வார்கள். பரிசோதனை செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.“
மண் மாதிரிகளை சேகரிக்க வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தமையால், அவ்விடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள், குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106 இன் கீழ் அரச அதிகாரிகளின் கடமைகளில் தலையிடக்கூடாது என உத்தரவிடுமாறு கோரி, பி அறிக்கை ஊடாக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீண்டும் நீதிமன்றத்திற்குள் வந்து வழக்கை மீளப் பெறுவதாக மன்னார் நீதவானிடம் தெரிவித்ததாக சட்டத்தரணி எஸ்.டினேஷன் கூறுகிறார்.
"அந்த வழக்கின் போது, ஒரு பொலிஸ் அதிகாரி திடீரென வெளியே சென்று திரும்பி வந்து, தனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், வழக்கை மீளப் பெறுவதாகவும், வழக்கு நிறைவுபெறும் தருவாயில் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்கமைய வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது.
ஓலைத்தொடுவாய், வள நகர் கிராமத்திற்கு வந்த அரச அதிகாரிகள், நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் பின்னர் கிராமத்தை விட்டு வெளியேற நேரிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
நாட்டின் சட்டமான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் வழங்கப்பட வேண்டிய காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டுமென தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காணி அல்லது பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் உறுதியாக வலியுறுத்தியுள்ளது.