இலங்கையில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடையில்லை! அனுர அரசாங்கத்தின் முடிவிற்கு பெரும் வரவேற்பு
மாவீரர் தின வார நினைவுகூரல் நிகழ்வுகள் தற்பொழுது ஆரம்பமாகி நினைவுகூரப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்த மாவீரர் தின நிகழ்வுகள் பற்றிய ஐய்யப்பாடுகள் எழுந்த வண்ணம் இருந்தன.
ஆனால் அரசாங்கம் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடையில்லை என அறிவித்துள்ளது. அதாவது நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து அதற்கு இணங்க மாவீரர் தினத்தை கடைப்பிடிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போரின் போது உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது எனவும் நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு இலங்கையில் மாவீரர் தின நினைவேந்தல்களிற்கு கடந்த கால அரசாங்கங்களினால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் துயிலும் இல்லங்களுக்கு எதிராகவும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றங்களை பொலிஸார் நாடுவது வழமையாக நடந்து வரும் செயற்பாடாக இருந்தது.
அவ்வாறு இருந்தும் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒரு சிலரால் இந்த நினைவேந்தல் அனுஷ்ட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இது முற்றிலுமாக மாறி அரசாங்கம் தற்பொழுது வெட்டவெளிச்சமாக தடையில்லை என அறிவித்துள்ளமை அனுர அரசாங்கம் மீது தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றது.
அரசாங்கம் பொலிசாருக்கும் மாவீரர் தினம் தொடர்பில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதாவது மாவீரர் தின நிகழ்வுகளில் பொது மக்கள் பங்கேற்கும் பொழுது அவர்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் பாதுகாப்பு படையினருக்கும் இந்த அறிவுறுத்தலை அரசாங்கம் விடுத்துள்ளது. அதே போல் 26 மற்றும் 27ம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவீரர் தினம் காரணமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக குறித்த அமர்வுகளை ஒத்திவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவற்றை எல்லாம் நோக்கும் பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஒரு வித நம்பிக்கையை ஊட்டும் செயற்பாடாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் என் பி பி அரசாங்கத்தினால் மாற்றம் நிகழும் என்பது ஒரு நம்பிக்கைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.
எதுஎவ்வாறாக இருந்தாலும் மாவீரர் தின நிகழ்வுகள் இலங்கையில் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கு தடை நீக்கத்தை செய்த என் பி பி அரசாங்கத்திற்கு லங்கா4 ஊடகத்தின் நன்றிகள்.