இவ்வருட மாவீரர் தினத்திற்கான உரையை வெளியிட்ட துவாரகா பிரபாகரன்
எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
இன்று மாவீரர் நாள்!
தமிழீழத் தனியரசு என்ற இலட்சிய வேட்கையோடு இன்றும் தமிழீழ தேசம் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்றால், அதற்குக் காரணமாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள். யாழ்ப்பாணக் கொற்றரசின் வீழ்ச்சியோடும், வன்னிச் சிற்றரசர்களின் வீர வரலாற்றோடும் மங்கிப் போய் விட்டதாக அந்நியர்களால் எக்காளமிடப்பட்ட ஈழத்தமிழர்களின் வீரத்தை மீண்டும் உலகிற்கு இடித்துரைத்தவர்கள் எமது மாவீரர்கள். மாவீரர்கள் எம் எல்லோரையும் போன்று சாதாரணப் பிறவிகளாகவே இப் பூமியில் உதித்தார்கள்.
ஆனாலும் தமிழீழ மக்கள் முகம் கொடுத்த அவலங்களும், தமிழீழத் தாயின் கால்களைச் சிறைப்பிடித்திருந்த அடிமைத் தளைகளும் எமது மாவீரர்களை அசாதாரணப் பிறவிகளாகக் குமுறி எழ வைத்தன.
தமிழீழ அன்னையின் அடிமைத் தளை உடைத்தெறியப்பட வேண்டும், எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத் தமது வாழ்வின் இளவேனில் காலத்தைத் துறந்து, தமது இன்னுயிர்களைத் தற்கொடையாக ஈந்த அற்புதப் பிறவிகள் மாவீரர்கள்.
எமது தேசத்தின் ஆன்மீக பலமாக, எமது தேசத்தின் உன்னத ஒளியாக எம்மை வழிநடத்தும் மாவீரர்களின் கனவை நிச்சயம் நனவாக்குவோம் என்று இப் புனித நாளில் உறுதிபூணுவோமாக. எனது அன்பார்ந்த மக்களே, இன்று சிங்கள தேசத்தில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.
மரபுவாதக் கட்சிகளையும், வாரிசு அரசியலையும் தூக்கி எறிந்து, முதற் தடவையாக ஒரு முற்றுமுழுதான இடதுசாரி இயக்கத்தைச் சிங்கள மக்கள் சிம்மாசனம் ஏற்றியிருக்கிறார்கள்.
மார்க்சிய பொதுவுடைமை ஆட்சியை ஈழத்தீவில் நிலைநாட்டுவதற்காக இரண்டு தடவைகள் பெரும் ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்தித் தோல்வி கண்ட ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) இன்று தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரத்தோடு ஆட்சி பீடம் ஏறியிருக்கின்றது.
அரசுத் தலைவருக்கான தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்த சிங்கள வாக்காளர்களில் பெரும்பான்மையானோரின் ஆதரவோடு, மக்களாட்சி வழிதழுவி ஆட்சி அதிகாரத்தை இன்று தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்தாலும், ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி)யின் கடந்த கால அரசியல் - பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய அச்சம் சாதாரண சிங்கள மக்களுக்கு இருக்கத்தான் செய்கின்றது.
இருந்த போதும், அதல பாதாளத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்திருக்கும் சூழமைவில், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனுர குமார திசநாயக்காவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஒரு வாய்ப்பைச் சிங்கள தேசம் வழங்கியிருக்கின்றது என்றே நாம் எண்ணத் தலைப்படுகின்றோம்.
இதே நிலைப்பாட்டையே அண்டை நாடான பாரதப் பேரரசும், உலகின் சக்தி வாய்ந்த நாடுகளும் எடுத்திருப்பதை நாம் உணராமல் இல்லை. உலகின் பல நாடுகளில் தோல்வி கண்ட பழமைவாத பொதுவுடைமைச் (கொம்யூனிச) சித்தாந்தத்தை இறுகப் பற்றிப் பிடித்திருக்கும் தேசிய மக்கள் சக்தியால் 'ஈழத்தீவின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமா’ என்ற ஐயம் உலக நாடுகளுக்கு இருக்கத் தான் செய்கின்றது.
இருந்த போதும், ஜனநாயக (மக்களாட்சி) வழிதழுவிச் சிங்கள மக்கள், ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியிருக்கும் ஒரு இயக்கத்தோடு முரண்பட்டுச் செல்வதை விட, அதற்கு வாய்ப்பளிப்பதற்கு உலக சமூகம் முன்வந்திருக்கின்றது. மறுபுறத்தில் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்திற்கு விரோதமான நிலைப்பாட்டை 1970களில் இருந்தே ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) பின்பற்றி வருவதைத் தமிழீழ தேசமும் மறந்து போய் விடவில்லை.
பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்ற போர்வையில் தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையை ஆரம்ப காலங்களில் இருந்தே மறுதலித்து வந்த ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி), இந்திய அமைதிப் படைகளின் காலத்தில் தென்னிலங்கையில் இரண்டாவது கிளர்ச்சியைத் தொடங்கியதற்கான முக்கிய வாதமே தமிழ் மக்களுக்கென்று தனியானதொரு ஆட்சி அலகை ஈழத்தீவில் இந்தியப் பேரரசு அமைத்து விடும் என்ற கருதுகோள் தான்.
சந்திரிகா அம்மையாரின் ஆட்சி அதிகாரத்தைப் பலப்படுத்தி, நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதான முயற்சிகளைச் சீர்குலைத்து, ஆழிப் பேரலையால் அழிவுற்றிருந்த தமிழீழத்தின் கடலோரப் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கென்று உலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்ட சுனாமிப் பொதுக் கட்டமைப்பை 2005ஆம் ஆண்டில் செயலிழக்க வைத்ததும் ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) தான்.
இதே போன்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக ஒரு நிர்வாக அலகாக இணைக்கப்பட்டிருந்த தமிழீழத் தாயகத்தின் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இரு கூறுகளாகத் துண்டாடும் தீர்ப்பை 2006ஆம் ஆண்டு சிறீலங்கா உச்ச நீதிமன்றம் வழங்குவதற்கு வழிகோலியதும் ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) தான் என்பதை நாம் மறந்து விடவில்லை.
ஆனாலும் சிங்கள தேசத்தில் நிகழ்ந்திருக்கும் அரசியல் மாற்றத்தையும், தேசிய மக்கள் சக்தியாகப் புது அவதாரம் எடுத்திருக்கும் ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி)யிற்குச் சிங்கள மக்கள் வழங்கியிருக்கும் ஆணையையும் கருத்திற் கொண்டு அனுரகுமார திசநாயக்காவின் அரசாங்கத்திற்குத் தமிழீழத்தின் தேசியத் தலைமைத்துவம் ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.
திம்புப் பேச்சுவார்த்தைகள் தொடக்கம் நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் வரை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது போன்று, தமிழீழத் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும், தமிழீழ மக்களைத் தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு தனித்துவமான தேசமாகவும் ஏற்றுக் கொள்ளும் காத்திரமான அரசியல் தீர்வை அனுரகுமார திசநாயக்காவின் அரசாங்கம் முன்வைத்தாலோ, அல்லது தமிழீழத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலோ அதனைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்குத் தமிழீழத் தேசியத் தலைமைத்துவம் தயாராகவே இருக்கின்றது.
இதற்கான நல்லெண்ண சமிக்ஞையாக, தமிழீழத் தாயகத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படைகளை விலக்கி, தமிழீழ மக்களுக்கு எதிரான அடக்குமுறை ஆயுதமாக விளங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து, தொல்பொருள் ஆய்வுகளின் பெயரில் தமிழீழத் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் சிங்கள-பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத்தீவில் தமிழீழ மக்களுக்கான அரசியல் வெளியை முடக்கி வைத்திருக்கும் ஆறாம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு அனுரகுமார திசநாயக்காவின் அரசாங்கம் முன்வர வேண்டும்.
இதுவே தமிழீழ தேசத்திற்கும், சிங்கள தேசத்திற்கும் மத்தியில் நிலையான சமரசமும், சமாதானமும் ஏற்படுவதற்கான புறச் சூழலுக்கு வழிகோலும். எனது அன்பார்ந்த மக்களே, இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்தித் தோல்வி கண்ட ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி), இன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றது என்றால் அதற்குத் தனது இலட்சியத்தில் அவ் இயக்கம் கொண்டிருந்த உறுதியும், அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பக் காய்களை நகர்த்தியதுமே காரணமாகும்.
தாயகத்தில் பல கட்சிகளாகவும், சுயேச்சைக் குழுக்களாகவும், புலம்பெயர் தேசங்களில் பல அமைப்புகளாகவும் கூறுபட்டுப் பிரிந்து கிடக்கும் தமிழீழ தேசத்தின் அரசியல் அலகுகள் ஒன்றுபட்டு, ஒற்றுமையோடு காய்களை நகர்த்தியிருந்தால், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கடந்த பதினைந்தரை ஆண்டுகளில் தமிழீழ தாயகத்தை ஈழத்தீவின் ஒரு அபிவிருத்தி அடைந்த மாநிலமாக மாற்றியமைத்திருக்க முடியும்.
உலக மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு அரசியல் சக்தியாக நாம் திரட்சி கண்டிருந்தால் சிங்கள தேசத்திற்கு உட்படாத சுயாதிபத்திய அரசியல் கட்டமைப்பாக நாம் பரிணமித்திருக்க முடியும். ஆயுத எதிர்ப்பியக்கமாக வீறுநடைபோட்ட தமிழீழத் தேசிய சுதந்திரப் போராட்டத்திற்கான மறவழிப் பாதைகள் மூடப்பட்டு, இராஜதந்திர வழி தழுவிய அரசியல் போராட்டத்திற்கான கதவுகள் திறக்கப்பட்ட சூழமைவில், எமது மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டும், உலக நாடுகளின் கோரிக்கைளுக்குச் செவி சாய்த்தும் ஆயுதங்களை முள்ளிவாய்க்காலில் எமது தேச சுதந்திர இயக்கம் ஓய்வு நிலைக்குக் கொண்டு வந்தது.
எமது மக்களையும், போராளிகளையும் கைவிட்டு எமது தலைமைப்பீடம் தப்பியோடவில்லை. மாறாகக் காலத்திற்கும், உலக சூழலுக்கும் ஏற்ப எமது தேச சுதந்திரப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்று மாவீரர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகவே எமது தேசியத் தலைமைப்பீடம் தந்திரோபாய அடிப்படையில் பாதுகாப்பான பிறிதொரு தளத்துக்கு நகர்ந்தது.
பன்மைத்துவ அரசியலுக்கும், ஜனநாயக விழுமியங்களுக்கும் இடையூறாக எமது தேசியத் தலைமைத்துவமும், தேச சுதந்திர இயக்கமும் விளங்குவதாகக் குற்றப்பத்திரிகை வாசித்த உலகிற்கும், நாடாளுமன்ற அரசியல் மூலம் தமிழீழ மக்களின் உரிமைகளை வென்றெடுத்து விடலாம் என்று நப்பாசை காட்டி வந்த மிதவாத அரசியற் தலைமைகளுக்கும் வாய்ப்பளித்துக் கடந்த பதினைந்தரை ஆண்டுகளாக எமது தேசியத் தலைமைத்துவம் அமைதி காத்து வருகின்றது.
எனது தந்தையாகிய தமிழீழத் தேசியத் தலைவரது இருப்பு மறுதலிக்கப்பட்டு, எனது அரசியல் பயணத்தை முடக்குவதற்கான சதிகளும், கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட எமது தேசியத் தலைமைத்துவம் அதியுச்ச சகிப்புத் தன்மையைப் பேணி வருகின்றது. இதன் மூலம் பன்மைத்துவ அரசியலுக்கும், ஜனநாயக விழுமியங்களுக்கும் எந்த அளவு மதிப்பை எமது தேசியத் தலைமைத்துவம் வழங்கியிருக்கின்றது என்பதை உலகம் புரிந்து கொள்ளும் என்று நம்புகின்றோம். நாம் வாரிசு அரசியலை மேற்கொள்ளவில்லை.
காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப, ஜனநாயக விழுமியங்களைத் தழுவி, அரசியல் வழியில் எமது தேசத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவே கடந்த ஆண்டில் எனது அரசியல் பயணத்தை நான் தொடங்கினேன்.
ஒன்று பட்ட தேசமாக, ஓரணியில் திரட்சி கண்டு எமது அரசியல் போராட்டத்தை ஒரு மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டமாக முன்னகர்த்துவதற்கு எமது மக்கள் உறுதிபூண்டால், தனது அஞ்ஞாதவாசத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இடையூறாக இருக்கும் அனைத்துத் தடைகளையும் எமது தேசியத் தலைவர் அவர்கள் உடைத்தெறிவார்.
அதற்கான சூழலை எமது மக்கள் ஏற்படுத்துவார்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு. எத்தனை தடைகள் ஏற்பட்டாலும், எத்தனை நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், எத்தனை சூழ்ச்சிகளுக்கு முகம் கொடுத்தாலும், எமது மாவீரர்களின் ஆன்ம பலத்துடன், எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் எமது இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிபூணுவோம்.
தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன்.