இந்திய மீனவர்களின் திட்டமிட்ட நடவடிக்கை! பேச்சுக்கு பின்னரும் குறையவில்லை
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண தமிழ் மீனவ தலைவர்கள் இருவர் இந்த வாரம் (நவம்பர் 24) பருத்தித்துறை பொலிஸில் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த மாதம் மற்றும் இம்மாதம் இலங்கை மீனவர்களின் 16 இலட்ச ரூபாய்க்கு அதிக பெறுமதியான வலைகளை இந்திய மீனவர்கள் அழித்துள்ளனர்.
பொலிஸில் முறைப்பாட்டை செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, இது இந்திய மீனவர்களின் திட்டமிட்ட நடவடிக்கை என தெரிவித்திருந்தார்.
“21ஆம் திகதி கடலுக்கு தொழிலுக்கு சென்றவர்கள் 23ஆம திகதி சென்று பார்த்தபோது இந்திய இழுவை படகுகளினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 13 பேருக்கு மேற்பட்ட மீனவர்களுடைய வலைகள் இந்திய இழுவை படகுகள், அத்துமீறி வந்து, அனலைதீவில் இருந்து ஐந்து கடல் மைல் தொலைவில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது கடற்றொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்களை கடற்றொழிலில் இருந்து அந்நியப்படுத்தும் செயலாகும். இந்திய இழுவைமடிப் படகுகள் இதனை திட்டமிட்டு செய்கின்ளறன.”
இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படுத்தப்படும் அழிவுகளுக்கு எந்தவொரு தீர்வையும் வழங்க துறைக்குப் பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என, அன்னலிங்கம் அன்னராசாவுடன் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற அனலைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோ குறிப்பிடுகின்றார்.
“இதுகுறித்து, இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. எங்களை இப்படி கொல்ல வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். எத்தனை இடங்களுக்கு, எத்தனை தலைவர்களுக்கு அறிவித்தாலும், அவர்கள் எதுவும் செய்வதாக தெரியவில்லை. இப்படி எங்களைக் கொல்லத் தான் திட்டம் போலிருக்கிறது.”
2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வடக்கில் 9 மீனவர்களின் 9 இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகளை இந்திய மீனவர்கள் இழுத்துச் சென்றபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் 27ஆம் திகதி முறைப்பாடு செய்த போதும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையென மீனவத் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடந்த நவம்பர் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர், இலங்கை மீனவர்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்த வேண்டுமென இந்திய மீனவர்கள் மற்றும் அந்நாட்டு மீன்பிடி அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுப்பதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
“இது உண்மையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இலங்கை கடல் பரப்பு என்பது எங்களுக்கு சொந்தமான கடல் பரப்பு. அது இந்தியாவுக்கு சொந்தமாக கடல் பரப்பு அல்ல. எங்களுடைய வளங்களை சூறையாடுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. அதற்கு இடமளிக்க முடியாது. அவர்கள் எங்களுடைய பிள்ளைகளுக்கு சொந்தமாக இருக்க வேண்டிய வளங்களை நாசமாக்குகின்ற வேலையை அவர்கள் செய்கின்றார்கள்.
இன்று இந்திய படகுகள் எங்கள் மக்களின் விதிகளோடு விளையாடுகின்றன. ஆகவே இந்த விளையாட்டை நிறுத்துங்கள் என இந்திய மீனவர்களுக்கும் மீன்பிடியுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.”
இலங்கை கடற்பரப்பில் இந்திய கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய-இலங்கை பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை கடல் பரப்பிற்குள் நுழையும் இந்திய படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மீனவர் சங்கத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். “இலங்கை, இந்திய அதிகாரிகள் கடந்த மாதம் 29ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் இந்திய படகுகள் அத்துமீறுவது அதிகரித்துள்ளது. எமது முற்றத்திலே வந்து தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” ஆறாவது அதிகாரிகள் மட்ட சந்திப்பு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் தகவல்களுக்கு அமைய, இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக ஒருங்கிணைந்த செயற்பாட்டு குழுவின் ஆறாவது அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் 2024 ஒக்தோபர் 29ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.
2022 மார்ச் மாத இறுதிப் பகுதியில் கூடிய இக்குழு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கூடியிருந்தது. இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“வடக்கு கிழக்கு பிரதேசம் சார்ந்த இலங்கை கடற் பரப்புக்குள் இந்திய படகுகள் நுழைவதைத் தடுப்பதற்கு இரு நாடுகளுக்கான சட்டத்தை செயற்பத்தும் அதிகாரிகளின் ஒருங்கிணந்த கூட்டு ரோந்து நடவடிக்கை, இரு நாடுகளிலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைக்குப் பின்னர், அந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்தல், இரு நாட்டு கரையோர பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படும் அவசர அழைப்பு பொறிமுறையை வலுப்படுத்தல், இலங்கை கடற் பரப்பில் இந்திய மீனவர்கள் தொடர்பாக நடைபெற்றுவரும் பரிசோதனைகளின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து பார்த்தல், மற்றும் இருநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களினால் மீன்பிடி துறை சார்ந்த ஒருங்கிணைந்த கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.”
இந்திய மீன்பிடிப் படகுகளினால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் இயந்திரத்தின் மூலம் கடலயில் இழுத்துச் செயல்லடும் வலையைப் பயன்படுத்துவதன் (Bottom trawling) காரணமாக கடல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மற்றும் அதனைத் தடுப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் இலங்கை அரசின் பிரதிநிதிகளினால் இதன்போது வலியுறுத்தினர்.
மேலும், இலங்கை பன்னாட் படகுகளுக்கு அரபிக் கடலுக்குப் பயணிப்பதற்கும் அங்கிருந்து திரும்பி வருவதற்கும் வசதி வழங்குவதற்கு இந்திய கடற் பரப்பின் ஊடாக பிரவேச வழியை ஏற்படுத்தித் தருமாறு கோரப்பட்ட கோரிக்கைக்குப் பதிலழிக்குமாறும் இலங்கைப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மீன்பிடி நடவடிக்கை தொடர்பான ஒருங்கிணைந்த குழுவின் கூட்டம் சட்டப்படி நடாத்துவதற்கும், ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.