மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு! சபையில் சிறிதரன்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய சிம்மாசன உரையிலே 80 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் விட்டது கவலைக்குரியது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் " நாங்களும் ஒரு ஆயுத விடுதலைப் போராட்டத்தின் ஊடாக எங்களுடைய உரிமைகள் தொடர்பான ஜனநாய ரீதியான போராட்டங்கள் ஆயுத முனை கொண்டு மழுங்கடிக்கப்பட்ட போது எங்களுடைய இளைஞர்கள் துப்பாக்கி தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
ஜனாதிபதி ஆற்றிய உரையின் சாராம்சத்திலே தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு முயற்சி என்ற விடயம் பேசப்படாமல் போனது துரதிஷ்டவசமான விடயமாக பார்க்கின்றோம். இந்த நாட்டின் கடன் சுமைக்கான காரணம் சொந்த சகோதரர்கள் மீது நீங்கள் நடத்திய யுத்ததும் யுத்தம் காரணமாக வாங்கிய கடன்களும் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஆனால் அதை மறக்கக்கூடிய வகையில் அல்லது அதை இல்லை என்று சொல்லுவது போல ஜனாதிபதியின் உரை அமைந்திருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கின்றது. யுத்தத்தால் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்ட இனமான நாங்கள் இன்றும் விடுவிக்கப்படாத காணிகள், அகதி முகாம்கள் என தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு?
ஆனால் அது ஒருவரை ஒருவர் அடக்குவதாக இருக்க கூடாது. உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும ஒரே சகோதரர்களாய் எப்படி வாழ முடியும். இது யோசிக்க வேண்டிய விடயம்.
இந்த நாட்டிலே அடக்குபவர்களோ அடக்கப்படுபவர்களோ இல்லை என்ற செய்தி வர வேண்டும். இங்கு அடக்குபவர்களும் இருக்கக் கூடாது அடிமைப்படுத்தப்படுபவர்களும் இருக்கக் கூடாது”என தெரிவித்தார்.