சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல்கள்!

#SriLanka #Article #Syria
Dhushanthini K
3 days ago
சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல்கள்!

சில வருட ஓய்வின் பின்னர் சிரியாவில் மீண்டும் ஆயுத மோதல்கள் தலைதூக்கி உள்ளன. சிரிய ஈராக் எல்லைப்புறப் பிராந்தியமான இட்லிப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் பல சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை அவர்கள் கைப்பற்றியதுடன் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலப்போவிற்குள்ளும் பிரவேசித்துள்ளனர். வடக்கு அலப்போ பிராந்தியத்தைக் கைப்பற்றிய அவர்கள் அலப்போ விமான நிலையம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். 'ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கை' என்ற பெயருடன் ஹயாத் தாஹிர் அல்-ஷாம் குழுவின் தலைமையில் தீவிரவாதிகள் நவம்பர் 27ஆம் திகதி தாக்குதல்களைத் தொடங்கினர். துருக்கி அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் உட்பட பல குழுக்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் கனரக ஆயுதங்கள் சகிதம் இந்தத் தாக்குதல்களில் பங்கு கொண்டதாகத் தெரிகின்றது

தாக்குதலில் சிரிய இராணுவத்தைச் சேர்ந்த டசின் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல இராணுவத்தினரும், இராணுவ ஆதரவு ஆயுதக் குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. வடக்கு அலப்போவைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்கிருந்து ஹாமா நகரை நோக்கி முன்னேறிச் சென்ற போதிலும் சிரிய மற்றும் ரஸ்ய விமானப்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அவர்களது முன்னேற்றம் தடைப்பட்டதாகவும் தெரிகின்றது. ரஸ்ய படைத் தரப்பு வெளியிட்ட தகவல்களின்படி இதுவரை 300 தீவிரவாதிகள் தமது விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

தீவிரவாதத் தாக்குதல்களிலும் பதில் தாக்குதல்களிலும் பல பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரை இட்லிப் பிராந்தியம் மீது சிரிய அரசாங்கத் தரப்பு நடத்திய தாக்குதல்களில் 81 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரிலான நிறுவனம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களுள் 34 குழந்தைகளும் 12 பெண்களும் அடங்குவர். தாக்குதல்களில் 304 பேர் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுள் 120 குழந்தைகளும் 78 பெண்களும் அடங்குவர்.

அலப்போ பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய தாக்குதல்களுக்கு முன்னதாக அலப்போ நகரில் 42 மருத்துவமனைகள் செயற்பட்டு வந்ததாகவும் தற்போது 8 மருத்துவமனைகளே செயற்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை பல்லாயிரக்கணக்கான மக்கள் மீண்டும் இடம்பெயரும் சூழல் உருவாகியுள்ளது. 02ஆம் திகதி திங்கட்கிழமை ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் 50,000 வரையான மக்கள் தற்போதைய தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஊடகர்கள் எவரும் இந்தப் பிராந்தியத்தில் இல்லாத நிலையில் அரசாங்க மற்றும் தீவிரவாதத் தரப்புச் செய்திகளையே நம்ப வேண்டிய நிலை உள்ளது.

உறங்கு நிலையில் இருந்த தீவிரவாதிகள் திடீரெனத் தாக்குதல்களைத் தொடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்ற வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் இருக்க தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரிய ஜனாதிபதி பஷீர் அல் சதாத் ஈரான் மற்றும் ஈராக் அரசுத் தலைவர்களோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். தலைநகர் டமஸ்கஸுக்கு டிசம்பர் முதலாந் திகதி நேரில் வருகை தந்த ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி சதாத்துடன் பேச்சுக்களை நடத்திவிட்டு துருக்கி சென்று அரச உயர் தலைவர்களைச் சந்தித்துள்ளார். தனது தொடர் முயற்சியின் ஒரு அங்கமாக ரஸ்யா சென்று விளாடிமிர் புட்டின் அவர்களோடு பேச்சுக்களை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரபு வசந்தத்தின் ஒரு அங்கமாக 2011இல் சிரியாவிலும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இது பின்னர் ஆயுதப் போராக மாறியது. அல்-கைதா உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்களுக்கும் சிரிய இராணுவத்துக்கும் இடையிலான போரில் ரஸ்யா, ஈரான், துருக்கி, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஆகியவை நேரடியாகத் தலையீடு செய்யும் நிலை உருவானது. ரஸ்யா மற்றும் ஈரான் நாடுகளின் ஆதரவோடு தீவிரவாதிகளை ஒடுக்கிய சிரியா அவர்களை இட்லிப் பிரதேசத்தோடு மட்டுப்படுத்திய நிலையில் 2017இல் ரஸ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் சிரியாவுடன் ஒரு ஒப்பந்தந்தைச் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிராந்தியத்தில் மோதல் தணிந்தது.

தற்போது 10 வருடங்களின் பின்னர் அலப்போ நகரில் தீவிரவாதிகள் மீண்டும் காலடி வைத்துள்ளனர்.

இதேவேளை, ஏக காலத்தில் வடகிழக்குப் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள தீவிரவாதிகளும் சிரிய அரசாங்கப் படைகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவின் அதரவுடன் செயற்பட்டுவரும் சிரிய ஐனநாயகப் படையினர் என்ற பெயரிலான தீவிரவாதக் குழுக்கள் பிராந்தியத் தலைநகரான டியர் அஸ் ஸோரை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய மோதலின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக சிரிய ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை, சிரியாவுக்கான தமது ஆதரவை ரஸ்யா, ஈரான், சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, கடந்த 13 ஆண்டுகளில் தீர்த்து வைக்கப்படாத பிரச்சனைகளின் வெளிப்பாடே தற்போதைய தாக்குதல் என இது தொடர்பில் கருத்து வெளியிட்ட துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கான் பிடன் கூறியுள்ளார். எதிர்த் தரப்பின் நியாயபூர்வமான கோரிக்கைகளைச் செவிமடுக்கத் தவறியதும் அரசியல் செயற்பாடுகளில் அவர்களைப் பங்கெடுக்க வாய்ப்பு வழங்காமையுமே இன்றைய நிலைக்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிரிய அரசாங்கம் முறைப்படி அழைப்பு விடுத்தால் தமது நாட்டுப் படைகளை அனுப்பி வைக்கத் தயார் என ஈரான் தெரிவித்துள்ளது. சிரிய அரசாங்கத்துக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கும் ஈரானின் ஆதரவுப் படைகளும், படைத்துறை ஆலோசகர்களும் ஏற்கனவே சிரியாவில் நிலை கொண்டுள்ளனர். அலப்போ பிராந்தியத்திலும் ஈரானின் 52 படைத் தளங்கள் உள்ளன. இவை தவிர மேலும் 177 இடங்களில் ஈரானியப் படைகள் தங்கியுள்ளன. தற்போதைய மோதலில் நேரடியாகப் பங்கு கொள்ள ஈரான் தயக்கம் காட்டி வருகின்றது. இது பிராந்திய மோதலாக விரிவடையக் கூடும் என்ற அச்சம் ஈரானுக்கு உள்ளது. ஏற்கனவே சிரியாவில் உள்ள பல ஈரானிய இலக்குகள் இஸ்ரேலில் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. இந்நிலையில் ஈரான் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுக்குமானால் இஸ்ரேல் பதிலடி வழங்கக் கூடும் என ஊகிக்கப்படுகின்றது.

மறுபுறம், அமெரிக்கப் படைகளும் சிரியாவில் உள்ளன. துருக்கியும் தன் பங்குக்குப் படைகளை நிறுத்தியுள்ளது. துருக்கியில் தனிநாடு கோரிப் போராடும் குர்திஷ் தீவிரவாதிகளை ஒடுக்கவென சிரியாவினுள் பிரவேசித்த துருக்கி தனது படைகளை அங்கு நிறுத்தி வைத்துள்ளது.

தற்போதைய நிலையில் சிரியப் படைகளுக்கு மிகப் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களைக் கணிக்கத் தவறியமை, தன் வசம் இருந்த பிராந்தியங்களைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறியமை, தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு முறையான பதிலடியை வழங்கத் தவறியமை எனப் பல பின்னடைவான விடயங்கள் உள்ளன.

லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர்நிறுத்தம் உருவான பின்னணியில் சிரியத் தாக்குதல்கள் ஆரம்பமான நிலையில் இது உள்நோக்கத்துடன் கூடிய திட்டமிட்ட ஒரு முன்னெடுப்பா என்ற கேள்வி எழுகின்றது. அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவியேற்க உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் போரை விரிவடையச் செய்ய நடவடிக்கை எடுத்ததைப் போன்று சிரியாவிலும் நடந்து கொள்ள முயற்சிக்கிறாரா என்ற கேள்வியையும் புறமொதுக்க முடியவில்லை.

சிரிய மண்ணில் பல நாடுகளும் கால் பதித்துள்ள நிலையில் பூகோள அரசியலின் ஒரு போட்டிக்களமாக அது மாறியுள்ளதை உணர முடிகின்றது. எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்பதற்கு ஒப்ப, உலக நாடுகளின் வல்லாதிக்கக் கனவுகளால் பாதிக்கப்படுவது என்னவோ சிரிய மக்கள்தான் என்பதே கசப்பான உண்மை.

நன்றி 

சுவிஸில் இருந்து சண்.தவராஜா


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!