கூட்டு ஊழலால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது : ரணில் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு!
எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலை ஒத்திவைத்தமையானது கூட்டு ஊழல் மற்றும் பொருளாதார கொலை என்பதுடன் அரசியல் கருக்கலைப்பு என சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.
சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகபெரும இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த கடிதத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட்ட 72 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் விரயமானது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
உரிய முடிவை எடுத்த ஆட்சியாளர்களிடம் இருந்து தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்.
தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த பொருளாதாரக் கொலையாளிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தாம் வீணடித்த மக்களின் வரிப்பணத்தை மக்களிடம் மீள வழங்குவதன் மூலம் அரசியல் வரலாற்றில் நாகரீகமான, அறம்சார்ந்த அத்தியாயத்தை சேர்ப்பதற்கு போதிய அவகாசம் எஞ்சியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.