காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (10) வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமக்குரிய நீதியைக்கோரி கிளிநொச்சியில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
மூன்று தசாப்தகால யுத்தத்தின்போதும், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறுகோரி 2017 ஆம் ஆண்டு முதல் 2500 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வருடாந்தம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
அதன் நீட்சியாக மனித உரிமைகள் தினமான இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுக்கவிருப்பதாகவும், அதேவேளை வட, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் தனித்தனியாக போராட்டங்களை நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்தில் மகஜரொன்றைக் கையளிக்கவிருப்பதாக் குறிப்பிட்ட அவர், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்ற நம்பிக்கையை தம் மத்தியில் ஏற்படுத்தக்கூடியவாறான நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்குரிய அழுத்தங்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்கவேண்டும் என அந்த மகஜர் ஊடாக வலியுறுத்தவிருப்பதாகத் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி கடந்தகால அரசாங்கங்களின் செயற்பாடுகளின் விளைவாக தாம் உள்ளகப்பொறிமுறையில் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்திருப்பதாகவும், எனவே சர்வதேச பொறிமுறையின் ஊடாகவே தமக்குரிய நீதி கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து போராடிவருவதாகவும் அம்மகஜரில் சுட்டிக்காட்டியிருப்பதாக லீலாதேவி குறிப்பிட்டார்.
மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், புதிய அரசாங்கம் தமக்குரிய தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை விதைக்கக்கூடியவாறான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் தற்போதுவரை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.