சர்வதேச மனிதவுரிமைகள் தினம் இன்று! வடக்கு கிழக்கு எங்கும் உறவுகள் போராட்டம்
1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எடுத்த தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு வேலைத் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசியல், கலாச்சார மற்றும் மனித உரிமைகள் கட்டமைப்பிற்குள் மக்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை விளக்குவதே இந்த நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல செயற்படுத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடக்கு கிழக்கு எங்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இம்முறை ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயோர்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கான சகலவிதமான உரிமைகளுடனும் வாழ்தலே அடிப்படை உரிமையாகும்.
ஒவ்வொரு மனிதனுக்குமான அனைத்து உரிமைகளையும் உறுதி செய்வதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சமாகும். கலாசாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர்வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாயத் தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்தவித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை இந்நாள் உணர்த்துகின்றது என்றால் அது மிகையாது.