மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய பாதுகாப்பு படைத்தலைவர் மரணம்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று குடியிருப்பு கட்டடம் ஒன்றின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.
மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் வாயிலில் எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டனர் என்று ரஷிய பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது இந்த கொலை அரங்கேறி உள்ளது.
இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரைன் தான் காரணம் என்று கீவ் உளவுத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.



