பிரேசிலில் விபத்துக்குள்ளான தனியார் விமானம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி!
பிரேசிலில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
லூயிஸ் கிளாடியோ கலியாசி என்ற 61 வயதான பிரேசில் தொழிலதிபர் விமானத்தை இயக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நபர் மற்றும் அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் விபத்தில் இறந்ததாக அவரது நிறுவனம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த குழுவினர் பயணித்த சிறிய ரக விமானம் பல கட்டிடங்கள் மீது மோதியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் தரையில் இருந்த 17 பேரும் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த தொழிலதிபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மோசமான வானிலையில் விமானம் புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.