தேங்காய் பால் கீரை சூப் - செய்முறை!
குளிர் காலத்திலும், மழை காலத்திலும் சூடாக சூப் செய்து கொடுத்தால் மனதிற்கும், தொண்டைக்கும் அவ்வளவு இதமாக இருக்கும். சத்து நிறைந்த இந்த தேங்காய் பால் கீரை சூப் செய்து சாப்பிட்டால் உடலும், மனமும் மட்டுமல்லாமல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தேங்காய் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதனுடன் கீரை சேர்த்து செய்யும் பொழுது சுவை அபாரமாக இருக்கும்.
தேங்காய் பால் கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் :
கீரை - இரண்டு கப்
சின்ன வெங்காயம் - ஏழு
பூண்டு பல் - நான்கு
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் கீரை சூப் செய்முறை விளக்கம் :
தேங்காய் பால் கீரை சூப் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான கீரையாக இருந்தாலும் நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு கப் அளவிற்கு பொடியாக நறுக்கி எடுத்து வையுங்கள். அடுத்து ஒரு குக்கரை கழுவி எடுங்கள்.
அதில் இரண்டு கப் அளவிற்கு கீரை துண்டுகளை சேர்த்து, அதனுடன் ஏழு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். - Advertisement - நாலு பல் பூண்டு தோல் உரித்து போட்டுக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சீரகத்தூள் சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு எடுங்கள். அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. விசில் வந்ததும் குக்கரை திறந்து கீரையை மத்து வைத்து நன்கு கடைந்து கொள்ள வேண்டும்.
கடைந்த கீரையுடன் ஒரு கப் அளவிற்கு தேங்காய் பால் சேர்த்து ரெண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். சூப் கொதிக்க ஆரம்பித்ததும் கடைசியாக இறக்கும் முன்னர் தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்து ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் தூவி சுடச்சுட அப்படியே பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக பத்து நிமிடத்தில் செய்து அசத்தக் கூடிய இந்த தேங்காய் பால் கீரை சூப்பில் ஏராளமான சத்துக்கள் ஒளிந்துள்ளன. கீரையில் இருக்கக் கூடிய அயர்ன் சத்து, தேங்காய் பாலில் இருக்கக்கூடிய கால்சியம், பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உடம்பில் கிடைக்கும் பொழுது நல்ல ஒரு சுறுசுறுப்பு கிடைக்கும்.
ஒரு கப் தேங்காய் பாலில் அவ்வளவு மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றது. அடிக்கடி கீரை சாப்பிட முடியாதவர்கள், இது போலவும் சூப்பாகவும் செய்து சாப்பிட்டால் கீரையில் இருக்கக் கூடிய சத்துக்கள் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சூப் ரொம்பவே பிடித்து போய்விடும். நீங்களும் இதே போல தேங்காய் பால், கீரை சேர்த்து சூப் செய்து பருகி பாருங்கள், அதன் சுவையை காலத்திற்கும் மறக்க மாட்டீர்கள்.