அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்துக்கு அமைய தொழிற்படையை கட்டியெழுப்புவதே நாட்டுக்கு தேவை - பிரதமர்
அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்துக்கமைய தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிபெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டுக்கு தேவையானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பதின்மூன்று பாடநெறிகளின் கீழ் டிப்ளோமாவை பூர்த்தி செய்த 761 இளைஞர், யுவதிகளுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாடும் தேசமும் முன்னேறுவதற்கு, சமூகமொன்று முன்னேறுவதற்கு பல்வேறு திறன்களைக் கொண்ட நபர்கள் அவசியமாகும்.
நாட்டின் கல்வி முறையின் ஊடாக எவரும் பின்னடைவை சந்திக்காது, முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்பதே அரசின் இலக்காகும். எமது இளையோரின் திறன்களை பூரண வேலைவாய்ப்புக்கு நேரடியாக பொருந்தக்கூடிய நபர்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதேபோல் தொழில்முனைவோர் திறன் கொண்ட தொழிற்படையணியாக இருக்க வேண்டும். இதன் மூலம் தொழிற்சந்தைக்கும் இளையோர் சமூகத்துக்கும் இடையே காணப்படும் திறன் பரஸ்பரத்தை குறைக்க முடியும்.
தொழிற்கல்வி, கைத்தொழில் கல்வி அல்லது தொழிற்சந்தைக்கு நேரடியாக தொடர்புபடும் பயிற்சி சந்தர்ப்பங்களை அதிகளவானோர் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாடசாலையிலிருந்து மூன்றாம் நிலை மட்டம் வரை இளைஞர், யுவதிகளுக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் திறன்களை பெற்றுக்கொடுப்பதற்கு எமது கொள்கை பிரகடனத்தின் ஊடாக நாம் திட்டங்களை வகுத்துள்ளோம். அனைத்து தொழிற்துறையும் மதிப்புக்குரியது. தாம் விரும்பும் எந்தவொரு தொழிற்துறையிலும் பிரவேசிக்கும் அனைவருக்கும் சமூகத்தில் முக்கியமான மற்றும் மதிப்புக்குரிய உறுப்பினர் என்ற உணர்வைக் கொண்டிருப்பதில் உறுதி இருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட தொழிற்துறையில் அவர் அல்லது அவளுக்கு முன்னேற முடியுமென்ற நம்பிக்கையை உருவாக்குவதும் அவசியமானது. எமது நாட்டுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இலங்கையின் இளையோர் பரம்பரைக்கு சிறப்பான திறன்கள் உள்ளன.
அதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்க தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப கல்வியை அபிவிருத்தி செய்வது மிகவும் முக்கியமானது. விசேடமாக, பயிற்சி மத்திய நிலையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கொள்ளளவு அபிவிருத்தி மூலம் பயிற்சியின் தரத்தை அதிகரித்தல் மற்றும் தொழிற்துறை கல்வியில் இளைஞர்கள் பயணிக்கக்கூடிய வழிகளை உறுதிப்படுத்தல் மற்றும் உருவாக்குதல் அவசியமாகும்.
தொழிற்துறை மற்றும் கைத்தொழில் துறையில் இளைஞர், யுவதிகளுக்கு உயர் சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்துக்கமைய தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிபெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டுக்கு தேவையானது என்றார்.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் பதில் தலைவர் சமந்தி சேனாநாயக்க, பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.