ஆசியாவிலேயே பசுமையான தீவாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி பணிப்புரை!
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.
“சுத்தமான இலங்கை” திட்டத்தை மீளமைப்பதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் வலுவடையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆசியாவிலேயே மிகவும் பெறுமதியான மற்றும் பசுமையான தீவாக இலங்கையை நிலைநிறுத்துவது பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது..
சுற்றாடல் மற்றும் கலாசாரத் துறைகள் ஊடாக சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் இந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முறையான மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.