நாட்டின் இருவேறு பகுதிகளில் இருவர் படுகொலை!
நாட்டின் இருவேறு பகுதிகளில் இரண்டு கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (30) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புடலுஓயா, டன்சினன்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
டன்சினன்வத்தை, பூடலுஓயா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது மகள், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் மேற்கண்ட முகவரியில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை மற்றும் சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் இருவரும் கட்டை மற்றும் கற்களால் தாக்கியது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய 46 மற்றும் 18 வயதுடைய தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புடலுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மதுரங்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடையமத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளிய கடையமத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மூத்த சகோதரியின் மகன் உள்ளிட்ட சிலருடன் ஏற்பட்ட தகராறில், உயிரிழந்த நபரை சகோதரியின் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.