யாழின் கல்விப் பொக்கிசத்தை சீரழிக்க முயலும் அர்ச்சுனாவுக்கு பாடம் புகட்டுவோம் கருணாகரன்
தனது அரசியல் வளர்ச்சிக்காகவும் விளம்பரத்திற்காகவும் வடக்கின் சுகாதார துறை மீதும் தமிழ் அரச அதிகாரிகள் மீதும் ஆதாரங்களற்ற கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அருச்சுனா என்பவர் நேற்று (30) யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையின் நிர்வாகத்தின் மீது ஏதோவொரு சதித்திட்டத்தின் பின்னணியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றார் என்று சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரமுகர் கருணாகரன் குணாளன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேற்படி மகளிர் பாடசாலையானது தொடர்ச்சியாக பல ஆண்டுகளாகவே அகில இலங்கை ரீதியில் பரீட்சை முடிவுகளில் முதன்மையான பாடசாலையாக சாதனை படைத்துவருவதோடு ஏனைய செயற்பாடுகளிலும் வெகு சிறப்பாகவே இப்பாடசாலையின் மாணவிகள் உச்ச திறமைகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர் .
யாழ். மாவட்டத்தின் கிராமப்புறங்களிலிருந்து மாத்திரமன்றி கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் அதிகளவான மாணவிகள் இப்பாடசாலையில் கல்வி கற்று சமூகத்தில் உயர் பதவிகளை அலங்கரித்து வருவதனை நான் நன்கறிவேன் .
இந்நிலையில் இந்த விளம்பர அரசியல்வாதியின் போலி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். க. பொ.த. உயர்தர பரீட்சையில் 1 ஏ 2 பி என்கின்ற தகுதியை கொண்டிருக்கின்ற அருச்சுனாவுக்கு எவ்வாறு மருத்துவ அத்தியட்சகர் பதவி கிடைத்தது ? இவரை விட தகுதியானவர்கள் ஏராளமானவர்கள் இருக்கும்போது சாதாரண சித்தியடைந்த இவர் பல் மருத்துவ துறைக்கு தட்டுத்தடுமாறி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென்று எடுத்த எடுப்பில் விசாலமான சாவகச்சேரி பிராந்தியத்தின் மருத்துவ துறையின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சக்தி செயற்பட்டுள்ளதென்பதே உண்மை .
சிங்கள பேரினவாதம் ஆரம்பத்திலிருந்தே இந்த அருச்சுனா என்பவரை சிறப்பாக பயன்படுத்துகின்றது என்கின்ற உண்மையை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.