சுவையான சிகப்பு அவல் லட்டு!
சிகப்பு அவல் லட்டு செய்ய தேவையான பொருட்கள் :
சிகப்பு அவல் – ஒரு கப்
தேங்காய் துருவல் – அரை கப்
நெய் – 3 ஸ்பூன்
முந்திரி, பாதாம், திராட்சை போன்ற நட்ஸ் வகைகள் – அரை கப்
பொடித்த வெல்லம் – அரை கப்
ஏலக்காய் – இரண்டு
செய்முறை
இந்த லட்டு செய்வதற்கு முதலில் வாங்கிய சிகப்பு அவலை புடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சிகப்பு அவலில் உமி இருக்கும். பின்னர் ஒரு பேனில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு அவல் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். நன்கு வாசம் வர வறுத்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள்.
பின்னர் அதே பேனில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு உங்களிடம் இருக்கக் கூடிய நட்ஸ் வகைகளை அரை கப் அளவிற்கு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை, பூசணி விதைகள், வால்நட்ஸ் எது உங்களிடம் இருக்கிறதோ அதை பொடிப்பொடியாக சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மீதம் இருக்கும் அதே நெய்யில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஆற வைத்துள்ள அவலை மிக்சர் ஜாரில் சேர்த்து அதனுடன் ரெண்டு ஏலக்காயை சேர்த்து, பொடித்து தூள் செய்துள்ள வெல்லத்தையும் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்த இந்த தூளுடன் வறுத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் நட்ஸ் வகைகளையும் சேர்த்து மீதம் இருக்கும் ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு நன்கு ஈரப்பதம் வர பிரட்டி கைகளால் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வையுங்கள்.
அவ்வளவுதான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஆரோக்கியம் நிறைந்த லட்டுவை உண்டு மகிழலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். வெளியில் வைத்திருந்தால் இரண்டில் இருந்து மூன்று நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.