தென் மாகாண சபையில் இடம்பெற்ற மோசடிகள் : 201 வாகனங்கள் மாயம்!
தென் மாகாண சபையின் 201 வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி தென் மாகாண, உள்ளுராட்சி ஆணையாளர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட முப்பது மோட்டார் சைக்கிள்களுக்கு பல சந்தர்ப்பங்களில் இலவச வருவாய் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும், வாகனங்களின் உரிமை மற்றும் பௌதீக இருப்பை சரிபார்க்காமல் இலவச வருமான அனுமதிப்பத்திரம் எவ்வாறு பெறப்பட்டது என்பதும் சிக்கலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி 10.5 மில்லியன் ரூபா செலவில் தென் மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு 51 மடிக்கணினிகள் 54 டேப்கள் மற்றும் கணனி என்பன வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மாகாண சபை கலைக்கப்பட்ட போதிலும், 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவை மீண்டும் சபை செயலகத்தில் ஒப்படைக்கப்படவில்லை எனவும், அதுவரை அவற்றை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தென் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவில் தொடர்ச்சியாக பல வருடங்களாக ஒரே நபர்களை நியமிப்பது ஆணைக்குழுவின் தீர்மானங்களின் வெளிப்படைத் தன்மையையும் பக்கச்சார்பற்ற தன்மையையும் மோசமாகப் பாதிக்கும் என்பதையும் கணக்காய்வு அறிக்கை காட்டியுள்ளது.