மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை! வெளிநாட்டு பயணிகளுக்கு சிக்கல்
புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடமிருந்து அதிகளவான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் ஏற்படுமானால், இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.